Ads Right Header

தைப்பூசம் தமிழர் வாழ்வில் வளம் கொழிக்கச் செய்யும் திருவிழா!!


பழனியில் இன்று மாலையில் தைப்பூச தேரோட்டம் நடைபெறுவதை ஒட்டி, தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண வைபவம் நேற்று இரவு 7:15 மணியளவில் அடிவாரத்திலுள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து இரவு வெள்ளித் தேரோட்டத்தில் முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வலம் வந்து அருள்பாலித்தார். அனைத்து சாலைகளும் ரோம் நகரை நோக்கியே செல்கின்றன என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.

அது போலவே, இன்றைக்கு பழனியை நோக்கி செல்லும் அனைத்து சாலைகளிலும் பக்தர்களின் வெள்ளத்தால் நிரம்பியுள்ளது. அந்த அளவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியை நோக்கி பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

பழனி தண்டாயுதபாணி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழா புகழ் பெற்றதாகும். அன்றை தினத்தில் பழனி தண்டாயுதபாணியை தரிசிப்பதற்கும், நேர்த்திக்கடனை செலுத்தவும், தமிழகம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் சாரை சாரையாக பாதயாத்திரையாக வருவதுண்டு.

இந்த ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த 2ஆம் தேதியன்று பழனி மலை அடிவாரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தைப்பூச விழாவைக் காண கடந்த மார்கழி மாதம் முதல் விரதம் இருந்து வரும் பக்தர்கள், கொடியேற்றம் நடைபெற்ற தினம் முதலே பாதயாத்திரையாக பழனியை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.

தைப்பூச திருவிழாவின் முத்தாய்ப்பாக, முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண வைபவம் நேற்று இரவு 7:15 மணியளவில் பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முத்துக்குமார சுவாமி தம்பதி சமேதராக இரவு 8:30 மணியளவில் வெள்ளித் தேரில் ரத வீதிகளில் உலா வரும் வைபமும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நேற்று அதிகாலை 2 மணி முதல் ஒட்டன்சத்திரம்-பழனி தேசிய நெடுஞ்சாலை வழியாக லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். அதிகாலை 3 மணி முதல் கடும் பனியையும் பொருட்படுத்தாமல், பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் இடும்பன் குளம், சண்முகா நதியில் நீராடிவிட்டு, காவடிகளுடன் சென்று பழனியாண்டவரை தரிசித்த வண்ணம் உள்ளனர்.
Previous article
Next article

1 Comments

Ads Post 4

DEMOS BUY