Ads Right Header

* வரலாறு அறிவோம்....( கிபி 1676 முதல் கிபி 1857 வரை )



தமிழ்நாட்டில் மராத்தியர்கள் ஆட்சி தஞ்சாவூரை தலைநகரமாகக் கொண்டு செயல்பட்டது.  இவர்களுடைய ஆட்சி காலம்,  தமிழ்நாட்டில் பல அரசியல் சக்திகள் தலைதூக்கிய காலமாகும்.  மராத்திய வீரர் சிவாஜியின் படையெடுப்பு,  அவுரங்கசீப்பின் படையெடுப்பு,  ஆற்காடு நவாப்பின் ஆட்சி,  பிரிட்டிஷ் கம்பெனி ஆட்சி என்று பல அரசுகள் தமிழ்நாட்டு வருவாயை அபகரித்துச் சென்றனர்.


..தஞ்சையில் மராத்திய ஆட்சியின் தோற்றம்.....


தஞ்சாவூரை நாயக்க மன்னர்கள் ஆட்சி செய்தபோது,  அதன் கடைசி நாயக்கராக இருந்தவர் விஜயராகவ நாயக்கர் ஆவார்.  அவரை,  மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கர் தோற்கடித்தார்.  அதன்பின் தஞ்சாவூர் நாயக்கர்,  மதுரை நாயக்கர்  ஆட்சியின் ஒரு பகுதியாக மாறியது.  தஞ்சாவூரை வென்ற மதுரை சொக்கநாத நாயக்கர்,  தஞ்சாவூரை,  நிர்வாகம் செய்ய தனது வைஸ்ராயாக அழகிரி என்பவரை நியமித்தார்.  இந்த அழகிரியிடம், ' வெங்கண்ணா'  என்ற பிராமண குரு வேலை செய்தார்.  அவர் தூண்டி விட்டதால்,  அழகிரி,  மதுரையில் இருந்து பிரிந்து தனியாக ஆட்சி   செய்யலானார். 


 அப்போது வெங்கண்ணா,  அழகிரியிடம் இருந்து உயர்ந்த பதவியை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தார்.  எனவே தஞ்சாவூர் பரம்பரை கடைசி நாயக்க மன்னர் தாஸ்ன் மகன்  செங்கமலதாஸ் உயிரோடு இருப்பதை அறிந்தார்.  பிறகு அந்த சிறுவனை தூக்கிக் கொண்டு,  பிஜப்பூர் சென்றார்.  அங்கே   செங்கமலதாஸின்  உரிமையை நிலைநாட்ட உதவி புரியும் படி கேட்டுக்கொண்டார்.   


பிஜப்பூர் சுல்தான்  அதில் ஷா,   ஏகோஜி என்ற மராத்திய படைத்தலைவரின் கீழ் படையை அனுப்பினார்.  தஞ்சையை ஆண்ட அழகிரி நாயக்கர்,  மதுரை நாயக்கரிடம்  உதவி கேட்டு ஏமாந்து போனார்.  

எனவே பிஜப்பூர் படைகளை ' அய்யம்பேட்டை'  என்ற இடத்தில் எதிர்த்தார்.  ஆனால் தோல்வி அடைந்தார்.  ஏகோஜி தன்னுடைய வேலை முடிந்ததென்று திரும்பி,  கும்பகோணத்தில் தங்கியிருந்தார்.  வெங்கண்ணா இப்போதாவது தனக்கு,  பிரதானி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.  ஆனால் செங்கமலதாஸோ,  தன்னை காப்பாற்றி வளர்த்த செட்டியாருக்குப்  பிரதானி பதவியை கொடுத்துவிட்டார்.  இதனால் ஏமாற்றமடைந்த வெங்கண்ணா,  கும்பகோணத்தில் தங்கியிருந்த  ஏகோஜி இடம் பொய் முறையிட்டார்.  இதைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி ஏகோஜி,  தஞ்சாவூர் நாயக்கர் கடைசி வாரிசு செங்கமலதசை  விரட்டிவிட்டு,  தானே அரசரானார்.  இது முதல் தஞ்சாவூரில் மராத்தியர்கள் ஆட்சி உதயமாயிற்று.


  * முதல் மராத்திய மன்னர்   ஏகோஜி ஆட்சி  கிபி 1676 முதல் கிபி 1683 வரை..


ஏகோஜி,  தஞ்சாவூரை ஆட்சி செய்யும் போது,  அவரின் ஒன்றுவிட்ட மூத்த சகோதரர் சிவாஜி தமிழ் நாட்டின் மீது படையெடுத்தார்.  சிவாஜி வேலூர்,  செஞ்சி போன்ற இடங்களை வெற்றி பெற்ற பிறகு,  திருமழவாடியில் தங்கினார்.  அங்கிருந்து சிவாஜி,  தஞ்சாவூரை ஆட்சி செய்வதில் ,  தனக்கும் உரிமை உண்டு எனக் கோரி,   ஏகோஜிக்கு  தூது விட்டார்.  ஏகோஜியும்,  சிவாஜியும்  திருமழவாடியில்  சந்தித்துப்  பேசிய பேச்சில் எதுவும் உடன்பாடு ஏற்படாததால்,  ஏகோஜி,  சிவாஜி இடமிருந்து தப்பித்து தஞ்சாவூர் வந்துவிட்டார்.  இதற்கிடையில் சிவாஜிக்கு,  மகாராஷ்டிரத்தில் பிரச்சினை ஏற்பட்டதால்,  சிவாஜி தாம் கைப்பற்றிய தமிழ்நாட்டை, ' சந்தோஜி'  என்ற படைத்தலைவடம்  ஒப்படைத்துவிட்டு மகாராஷ்டிரம் சென்றார்.  அங்கே பீஜப்பூர் சுல்தானிடம்,  செஞ்சி மற்றும் தஞ்சாவூர் தனக்குரிய ஆட்சி தொகுதிகளாக (ஜாகீர்களாக)  பெற்றுக் கொண்டார்.  இதையறிந்த தஞ்சை மராட்டிய மன்னர் ஏகோஜி விரக்தியடைந்து,  சன்னியாசியாக முடிவு  செய்தார்.  ஆனால் சிவாஜி உருக்கமாக மீண்டும் ஆட்சி செய்ய வேண்டும் என்று ஒரு கடிதம் எழுதினார்,  அந்த கடிதத்தின்படி,  மீண்டும் ஆட்சி செய்தார்.  இதற்கிடையில் சிவாஜி கிபி 1680 இல் இறந்துவிடவே,  ஏகோஜி தஞ்சாவூரின் போட்டியில்லாத மன்னராக செயல்பட்டார்.


 * மதுரை சொக்கநாத நாயக்கரின் படையெடுப்பு....


 ஏகோஜியின்  காலத்தில் மதுரை சொக்கநாத நாயக்கர்  தஞ்சாவூரைக்  கைப்பற்ற  படையெடுத்தார்.  ஆனால் இவர் நேரடியாக  தஞ்சாவூரை தாக்காமல்,  சிவாஜியின் படைத்தலைவர் சந்தோஜியிடம்  ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டு,  அவர் மூலம் தஞ்சையை கைப்பற்றத்  திட்டம் போட்டார்.  ஆனால் ஏகோஜி, சந்தோஜியிடம்  தனியாக ஒப்பந்தம் செய்து  கொண்டதால்,  சொக்கநாத நாயக்கர் தப்பி ஓடும் நிலை ஏற்பட்டது.  மேலும்,  ஏகோஜி காலத்தில்,  அவுரங்கசீப் மராட்டிய வீரர் சிவாஜியின் மகனை விரட்டித்  தமிழ்நாட்டுக்குள் படையெடுத்தார்,  அந்தப்  படையெடுப்பில்,   மராத்தியருக்கு  மராத்தியர் உதவி செய்யாமல்,  ஏகோஜி பேசாமல் இருந்துவிட்டார்.  இதனால் மராத்திய சாம்ராஜ்யம் தமிழ்நாட்டில் காலூன்றியது.


*   ஷாஜி கிபி 1684 முதல்  கிபி 1712 வரை....

இவர் ஏகோஜிக்கு அடுத்து  தஞ்சையை ஆட்சி புரிந்த மராத்தியர் ஆவார்.  இவருடைய காலத்தில்,  வடக்கில் அவுரங்கசீப் படையெடுப்பைத்  தாக்குப்பிடிக்க முடியாமல்,  சிவாஜியின் இரண்டாம் மகன் இராஜாராம்,   செஞ்சிக்கு தப்பி ஓடி வந்தார். எனவே  இராஜாராமைக்  கைது செய்ய அவுரங்கசீப்,  சுல்பிகர்கான்   என்னும் படைத்  தலைவரை அனுப்பி வைத்தார்.   இந்த படையெடுப்பில்,  தஞ்சை மன்னர் ஷாஜி,  தப்பி ஓடிவந்த இராஜாராமுக்கு உதவி புரிந்தார்.  ஆகவே,  சுல்பிகர்கான்  தஞ்சாவூர் மீது படையெடுத்தார்.  இதை எதிர்த்து செஞ்சி இராஜாராமும் படையை அனுப்பினார்.  ஆனால் இரண்டு படைகளும்,  மொகலாய படைத்தலைவர் தோற்கடித்தார்.  மேலும்  சுல்பிகர்கான்,   தஞ்சை மன்னர் ஷாஜியை,  இராஜாராமுக்கு  உதவி செய்யாமல் இருக்க அறிவுரை வழங்கினார்.  இதை ஏற்றுக்கொண்டு,  ஷாஜி,  சுல்பிகர்கானுக்கு  30 லட்சம் ரூபாய் ஆண்டுதோறும் தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டார்.


 முகலாயப் படை தலைவர் சுல்பிகர்கானுக்கும்   ஷாஜிக்கும் இடையில்  கிபி  கிபி1691 முதல்  கிபி 1694 வருடத்திற்குள் பல உடன்படிக்கைகள் மாறி மாறி ஏற்பட்டன.


இவருடைய காலத்தில் மதுரையில் இராணி மங்கம்மாள் ஆட்சி செய்தார்.  இவர்,  தஞ்சாவூர் அரசர் ஷாஜியின் சிக்கலான நிலையை தனக்குச்  சாதாரணமாகப்  பயன்படுத்திக் கொண்டார்.  மராட்டிய அரசர், ஷாஜி,  முகலாய பிரதிநிதி   சுல்பிகர்கானுக்கு பயந்து போய் கிடப்பதை அறிந்து,  இராணி மங்கம்மாள் சுல்பிகர்கானுக்கு  பணம் அளித்து தனக்கு வாகனமாக்கிக் கொண்டார்.  அவரின் துணையோடு,  தஞ்சாவூர் அரசர்  ஷாஜி இடமிருந்து,  மதுரை முன்பு இழந்த பகுதிகளை மீட்டுக்கொண்டார்.  ஆனால் ஷாஜி தான் இழந்த பகுதிகளை,  இராமநாதபுரம் கிழவன் சேதுபதி மூலம் திரும்பப் பெற்றார்.  ஆகவே மங்கம்மாள்,  தஞ்சாவூர் மீது படையெடுத்தார். ' கல்லணை'  இருக்கும் பகுதியைக் கைப்பற்ற வேண்டும் என்று தனது தளபதி  நரசய்யாவுக்கு   இராணி மங்கம்மாள்  உத்தரவு போட்டார்.  தளபதி நரசய்யாவும்,  பொங்கி வரும் காவிரி ஆற்றை கடந்து நேரடியாக தஞ்சாவூர் போய் சேர்ந்தார்.  அங்கு தன்  படைகளுடன்,   தஞ்சையை தோற்கடித்தார்.  எனவே ஆத்திரமடைந்த   ஷாஜி,  தன்னுடைய அமைச்சர் ' பாலாஜியை'  கண்டித்துப் பேசினார்.  இதனால் பாலாஜி,  இராணி மங்கம்மாள் தளபதி  நரசய்யாவுக்கு அதிகமாக பணம் கொடுத்து,  ஒருவழியாக அமைதிப் பேச்சுக்கு ஏற்பாடு செய்து போரை முடித்து வைத்தார்.


ஷாஜி  மன்னர்,  இராமநாதபுரம் கிழவன் சேதுபதியுடன்  நட்பு வைத்திருந்தாலும்,  திடீரென்று மதுரை   மங்கம்மாளுடன் சேர்ந்து கிழவன் சேதுபதியை எதிர்த்தார்.  ஆனால்,  கிழவன் சேதுபதி  தஞ்சை படைகளை  விரட்டி அடித்து விட்டார்.


 ஷாஜி ஒரு சிறந்த கலா ரசிகராகவும் இருந்தார்.  அவருடைய சபையில் 46 அறிஞர்கள் இருந்தனர்.  அவர்களின்  இராமநாதபுரத்தை  சேர்ந்த தீக்ஷிதர் என்பவர் முக்கியமானவராவார்.   இவர் தன்னுடைய அரண்மனையில்,  அரியணை அறை ஒன்றை கட்டினார்.  இவர் ஏழை,  நோயாளிகளுக்கு மருத்துவ  வசதிகளுக்காக ஆஸ்பத்திரிகளில் காட்டினார்.  இவர் ஒரு சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்தினார்.  ஆனால் இவருக்கு ஏனோ கிறிஸ்தவர்களை பிடிக்கவில்லை.  அதற்கு காரணம் பலவாறாக சொல்லப்படுகிறது.   போர்த்திகீசிய  மதப்  பிரசாரகர்கள் இந்திய உடைகளை அணிந்து தங்களை ' ரோமன் பிராமணர்கள்'  என்று  அழைத்துக் கொண்டனர். மேலும் இந்து கோயில்களுக்கு அருகிலேயே தங்கள் மதப் பிரச்சாரத்தை செய்தனர்.  கடலூரில்,  கிறிஸ்தவர்கள் இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தும் ஒரு நாடகத்தை,  மன்னர் முன்னிலையில் நடத்தினர்.  ஆகையால்,  ஷாஜி கோபமுற்று அவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.  அவர்கள் மீது வரியை சுமத்தினார்.  தஞ்சாவூர்,  பாண்டிச்சேரியில்  வசித்த. கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டனர்.  அவர்களின் திருச்சபைகள்,   இடிக்கப்பட்டன ஆனால்  நவாப் தாவுத் கான் தலையிட்ட பிறகு மராத்திய மன்னர்  ஷாஜி அமைதி அடைந்ததாக தெரிகிறது.


 * முதலாம் சரபோஜி  கிபி 1712 முதல் கிபி 1728 வரை.....


இவர் மராத்திய மன்னர்  ஷாஜியின் தம்பி ஆவார். ஷாஜி இறந்ததும்,  மற்றொரு சகோதரர்  துக்கோஜியுடன்  சேர்ந்து கொண்டு மராட்டிய  அரசரானார்.  இவர்,  காவேரி அணையை உடைக்க வந்த எதிரிகளை வெற்றி கொண்டார் என்று ' சரபோஜி சரிதம்'  என்ற நூல் குறிப்பிடுகின்றது.  இவர் காலத்தில் புகழ்பெற்ற மந்திரியாக இருந்தவர் 'அய்ய  உய்யன்'  என்பவராவார்.  சரபோஜி பிராமணர்களுக்கு சரபோஜி இராஜபுரம் என்ற பேரில்,   அக்கிரகாரங்களை  ஏற்படுத்தினார்.  இவருடைய காலத்தில்,  இராமநாதபுரம் சேதுபதி ஆட்சியில் வாரிசுரிமை போட்டி ஏற்பட்டது.  அங்கே பவானி சங்கர் என்பவருக்கும்  தண்டை தேவர் என்பவருக்கும் சேதுபதி அரசை கைப்பற்ற போட்டி ஏற்பட்டது.  இதில் பவானி சங்கர்,  மராட்டிய அரசர் சரபோஜி உதவி தேடினார்.  சரபோஜியும்   தன்னுடைய தளவாய்  ஆனந்த ராவ் என்பவரை பவானி  சங்கருக்கு உதவ அனுப்பினார்.  மராத்திய உறவு மூலம் பவானி சங்கர் சேதுபதி பதவியை பெற்றார்.

ஆனால் பவானி சங்கர்,  தஞ்சாவூர் செய்த உதவியை மறந்ததால்,  மீண்டும் படையெடுத்து,  வெற்றி பெற்றார்.  பிறகு சேதுபதி நாட்டை பிரித்து,  சிவகங்கை சீமை ஒன்றை ஏற்படுத்தினார்.


 * துக்கோஜி  கிபி 1728 முதல்  கிபி 1736 வரை.....


இவர் ஷாஜியின் இளைய தம்பி ஆவார்.  இவர் கிபி 1728ல்,  பதவி ஏற்றார்.  இவருடைய காலத்தில்,  கர்நாடக நவாப் ஆக இருந்தவர் 'தோஸ்த் அலி'  ஆவார்.  இவர் மதுரை,  இராமநாதபுரம்,   தந்தை பகுதிகளை  கைப்பற்ற தன்னுடைய மகன் சப்தர்  அலியையும்,  மருமகன் சந்தா சாகிப்பையும் அனுப்பினார்.  துக்கோஜி இந்த படையெடுப்பில் உடனே சரணடைந்து,  அவர்களுக்குத் தேவையான கர்ப்பத்தை கட்டினார்.  இவர் ஒரு மொழியியல் வல்லுனராக இருந்தார்.  இவர் மராத்திய முதல் அரசர்   ஏகோஜியின் கடைசி மகன் ஆவார்.  இவர் மதுரை நாயக்க அரசி மீனாட்சி இடமிருந்து,  திருக்காட்டுப்பள்ளி மற்றும்  திருச்சியை கைப்பற்ற முயற்சி செய்தார்.  இதற்காக,  மீனாட்சியின் கவனத்தைத் திருப்ப,  அவரை புதுக்கோட்டை தொண்டைமான் மீது படையெடுக்க தூண்டினார்.  ஆனால்,  மீனாட்சி,  மராத்திய அரசரின் தந்திரத்தை அறிந்து கொண்டார்.  இதற்குள் தஞ்சாவூர் அரசர்,  மீனாட்சிக்கு  ஆற்காடு நவாப் சந்தாசாகிப் மூலம் ஆபத்து வருவதை அறிந்து அவருக்கு உதவி செய்தார்.  ஆனால் அவரது உதவிகள் பலிக்காமல்,  மீனாட்சி  சந்தாசாகிப் பால் தோற்கடிக்கப்பட்டார்.


* பிரதாப்  சிங் கிபி  1741 முதல்  கிபி 1765 வரை.....


இவர் நவாபுக்கு கொடுக்க வேண்டிய கப்பப் பணத்தை கொடுக்காமல் இருந்தார்.  எனவே கோபமடைந்த நவாப்,  பிரதாப் சிங்கிற்கு ஓய்வூதியம் கொடுத்தார்.  ஆகவே பிரதாப் சிங்கம்,  இராமநாதபுரம் சேதுபதி,  புதுக்கோட்டை தொண்டைமான் ஆகியோர்கள்,  பூனா மகாராஷ்டிரா மகாராஜா சதாரா  என்பவரிடம் உதவி  கேட்டார்கள்.  தங்களுடைய இனத்தவர்கள் என்று மகாராசா  சதாராவும் படைகளை  இரகுஜி பன்சாலே மற்றும்  பதேசிங்  ஆகியோர் தலைமையில் அனுப்பினார்.  இந்த படைகள்,  நவாப் தோஸ்த் அலியை, 'தமலச்  செருவு'  என்ற  இடத்தில் கிபி 1740 கொன்று அவருடைய மருமகன் சந்தாசாகிபை கைது செய்து,  பூனாவிற்கு அனுப்பின.  மீண்டும் பிரதாப் சிங் பதவி பெற்றார்.  திருச்சி கோட்டையை மராத்திய தலைவர்  முராரி ராவ் என்பவரிடம் ஒப்படைத்தனர்.


ஆர்க்காட்டு நவாபின் தோல்வியை அறிந்த ஐதராபாத் நிஜாம்,  நீசாம்  முல்க்  அஷப் ஜா,  பெரும்படையுடன் தஞ்சாவூர் வந்தார் கிபி 1743. பூனா மராத்தியர்கள்,  தங்களின் பிரதிநிதியான முராரி  ராவை, திருச்சியிலிருந்து வெளியேற கட்டளையிட்டனர்.  இதன் பின்னர் அன்வர்தீன் என்பவரை,  நவாபாக நியமித்தனர்.  நவாப்  அன்வர்தீன்,  பிரதாப் சிங் இருமுறை தோற்கடித்தார்.  இந்த நேரத்தில் ஆங்கிலேயர்களும்,  பிரஞ்சுக்காரர்களும்,  தங்களுடைய ஆதிக்கத்திற்காக,  தஞ்சாவூர் அரசரை தங்கள் பக்கம் சேர நெருக்கிக் கொண்டிருந்தனர்.  பிரதாப் சிங் ஆங்கிலேய ரஞ்சித் போரில்,  எந்த பக்கமும் சேரவில்லை.  ஆனால்,  பிரெஞ்சுக்காரர்கள் தஞ்சாவூர் பக்கம் வந்துவிட்டதும்,  அவர்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார்.  அதன்படி காரைக்கால் பகுதிக்கு,  பிரதாப் சிங் கப்பம் கட்ட வேண்டியவரானார்.  ஆனால்      பிரெஞ்சு   கவுண்ட்டி  லாலி,  பிரதாப்  சிங்கிடம்  56 லட்சம் கேட்டார்.  மேலும்,  சந்தாசாகிப் தன்னுடைய மகனை, தஞ்சாவூர் அரசராக முயற்சி செய்தார்.  எனவே இப்பொழுது பிரதாப் சிங் பிரிட்டிஷ்காரர்களுடனும்,  சேதுபதி,   தொண்டைமான்களுடனும் சேர்ந்துகொண்டு,  பிரெஞ்சுக்காரர்களை கிபி 1759  ஆகஸ்ட் 18ல் விரட்டி விட்டார்.  மேலும் சந்தாசாகிபை,  தன்னுடைய அரச சபைக்கு வரவழைத்து கொலை செய்தார்.


 * ராஜா துலாஜாஜி கிபி 1763 முதல் கிபி 1787 வரை.....


இவருடைய காலத்தில் ஆற்காடு நவாப் முகமது அலி,  தஞ்சாவூர் கைப்பற்ற திட்டம் தீட்டினார்.  ஆகவே,  நவாப் ஆங்கிலேயர்களிடம்,  தஞ்சாவூர் அரசர்,  தான் ஹைதர் அலியிடம் நடத்திய போர்களில் ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டி,  அவர் மீது போர் புரிய,  ஆங்கிலேயர்களின் உதவியை நாடினார்.  ஆங்கிலேயர்களும் அதற்குச்  சம்மதித்தனர்.  நவாபின் மகன்,  உமத்-உல்- உமரா,   தஞ்சாவூரை நோக்கி படையெடுத்துச் சென்று,  வளத்தை கைப்பற்றினர்.  உடனே,  துலாஜாஜி  நவாபின்,  நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டார்.  இதன் மூலம்,  தஞ்சாவூர்,  நவாபின் ' நில உடமை சொத்தாக'  மாறியது.


 ஆனால் நவாப் திருப்தி அடையவில்லை.  அவர் பிரிட்டிஷ்காரர்கள் இடம் மீண்டும் புகார் கூறி, பிரிட்டிஷ்காரர்களை,  தஞ்சாவூர் மீது படையெடுக்க தூண்டினார்.  எனவே,  பிரிட்டிஷ் கம்பெனி, 'ஜெனரல் ஸ்மித்'  என்பவரை செப்டம்பர் 17,  கிபி 1773ல் அனுப்பியது.  கம்பெனி,  தஞ்சாவூரை தாக்கி இணைத்துக்கொண்டது.  ஆனால் கம்பெனி இயக்குனர்கள்,  தங்களிடம் அனுமதி பெறாமலேயே,  சென்னை அரசாங்கம் போர் தொடுத்தது என்பதால்,  தஞ்சாவூரை மீண்டும் மராத்தியர்களுக்கே கொடுக்க  உத்தரவு போடப்பட்டது. ' பைகாட் பிரபு'  என்பவர்,  தஞ்சாவூர் வந்து மீண்டும்  துலாஜாஜியை  மன்னராக்கினார்.

பைகாட் பிரபுவும்,  துலாஜாஜியும்  ஒப்பந்தம் செய்து கொண்டனர்.  இதன்படி,  ஆங்கிலேயர்கள் தஞ்சாவூர் இராஜாவின்  அரசுரிமையை மறுத்தனர்.  தஞ்சாவூரை சுற்றி பிரிட்டிஷ்காரர்கள் கோட்டையை கட்டி கொண்டனர். துலாஜாஜி நாலு  லட்சம்  பகோடாக்களைப்  ஆண்டுதோறும் பிரிட்டிஷ்காரர்களுக்குத்  தர வேண்டியதாயிற்று. துலாஜாஜியை,  கப்பம் கட்டாமல் போய்விடக்கூடாது என்பதற்காக,  தான் வரிவசூல் செய்து வந்த 277 கிராமங்களை,  ஆங்கிலேயர்களுக்கு 1787ல்  அளித்தார்.


 * அமீர் சிங்  கிபி 1787 முதல் கிபி 1798 வரை....


துலாஜாஜி  இறந்த பின்பு,  இவர் ஆட்சிப் பொறுப்பேற்றார்.  இவர் சற்று திறமையானவர்.  ஆகையால்,  பிரிட்டிஷ் அரசு மேலும் சில நிபந்தனைகளை விதித்தது.  இது கிபி 1787 உடன்படிக்கையாகும்.  இதன்படி,  அரசர் 4 லட்சம்  பகோடாக்களை கம்பெனிக்கு தர வேண்டும்.  இந்தத் தொகை செலுத்தப்படவில்லை என்றால்,  பிரிட்டிஷ் ஒரு நிர்வாக அதிகாரியை நியமித்து வசூல் செய்து கொள்ளும்.

ஆனால் பிரிட்டிஷ் கம்பெனி அத்துடன் விட்டுவிடவில்லை. அமர்சிங் சரியாக ஆட்சி நடத்த வில்லை என்று கூறி அவரை மன்னர் பதவியிலிருந்து இறக்கினார்கள்.  மேலும் அவர் உண்மையான வாரிசு இல்லை என்று பிரிட்டிஷ்காரர்கள் குற்றம்சாட்டினார்கள்.


 * இரண்டாம் சரபோஜி  கிபி 1798 முதல் கிபி 1833 வரை.....


சரபோஜி மன்னர் சுவாட்சு  பாதிரியாரால்  வளர்க்கப்பட்டவர்.  இவர் மராத்திய வம்சத்தின் மிகச்சிறந்த மன்னராவார்.  இவர் கிபி 1798இல் பதவிக்கு வந்தார்.   இவர் 35 வருடங்கள் ஆட்சி செய்தார்.  இவர் மன்னர் ஆவதற்கு முன்பு,  ஆங்கிலேயர்களுடன் பல  நிபந்தனைகளையுடைய  உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். இதன்படி,   அரசர்,  பிரிட்டிஷ்  கமிட்டி கூறும் எல்லா யோசனைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 'மோரினாங் பிரபு'  கவர்னர் ஜெனரலாக வந்ததும்,  சரபோஜி மேலும் ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட வைத்தார்.  இதன்படி,  கிபி 1799இல் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.  இதன்மூலம்,  மன்னர் சரபோஜி,  தன்னுடைய ஆட்சி நிர்வாகத்தை முழுவதும் கம்பெனிக்கு மாற்ற ஒப்புக்கொண்டார்.  தன்னுடைய செலவிற்காக நான்கு லட்சம்  பகோடாக்களை மட்டும்  பெற்றுக் கொள்வது என்றும் ஏற்றுக் கொண்டார்.  இந்த உடன்படிக்கையின்படி,  தஞ்சாவூர் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாகியது.


 சரபோஜி மன்னர் கோட்டைக்கு வெளியில் இருந்த' செவ்வப்ப நாயக்கர் குளத்தை'  பழுது பார்த்தார்.  மேலும் கோட்டைக்குள்ளிருந்த, சிவகங்கை குளத்தை பாதுகாத்தார்.  இவர் காலத்தில்,  பெரிய குளத்தில் இருந்த தண்ணீர்,  சிறிய குளங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.  இது 'ஜலசுஸ்த்திரம்'  என்று அழைக்கப்பட்டன.   கோட்டையிலிருந்து கழிவுநீரை வெளியேற்ற,  தஞ்சாவூர் தெருக்களில்,  கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டன.  இவர்,  சரஸ்வதி மஹால் நூல் நிலையத்தை ஏற்படுத்தினார்.  இது,  தஞ்சாவூர் மகாராஜா  சரபோஜி,  சரஸ்வதி மஹால் அரண்மனை நூல்நிலையம் என்று  அழைக்கப்படுகிறது.


  * இராஜா சிவாஜி  கிபி 1833 முதல் கிபி 1855 வரை.....


இவர் இரண்டாம் சரபோஜியின் மகனாவார்.  இவர் ஜி யு போப் என்பவருடன் தொடர்பு கொண்டிருந்தார்.  தன்னுடைய சொந்த செலவில் ரூபாய்  71  ஆயிரத்தில் வெண்ணாற்றங்கரை,   வெடவாறு,  குடமுருட்டி,  திருவையாறு ஆகிய இடங்களில் நான்கு பாலங்களை கட்டினார்.  மேலும்,  தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவையும் இவர் நடத்தினார்.  இவருக்கு ஆண் வாரிசுகள் யாரும் இல்லாததால்,  டல்ஹௌசியின் 'அவகாசியிலிக்'  கொள்கைப்படி தஞ்சாவூர்,  ஆங்கிலக் கம்பெனிக்கு சொந்தமாக்கியது.








Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY