Ads Right Header

அரசியலமைப்பின் வளர்ச்சி (1858 - 1947)

 



1744 ஆம் ஆண்டு ஒழுங்குமுறைச்சட்டம் கொண்டு வரப்பட்டதிலிருந்து இந்திய அரசியலமைப்பின் வரலாறு தொடங்குகிறது. 1784 ஆம் ஆண்டு பிட் இந்தியச் சட்டம் மற்றும் 1793 முதல் 1853 வரை இயற்றப்பட்ட பட்டயச் சட்டங்கள் கிழக்கிந்திய வணிகக்குழுவின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாகும். 1858 ஆம் ஆண்டு கலகம் இந்தியாவில் நடைபெற்ற பிரிட்டிஷ் ஆட்சியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியது. இந்தியாவின் ஆட்சி, இங்கிலாந்து அரசரின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1858 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தில் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. விக்டோரியா அரசியின் அறிக்கை இந்தியர்களுக்கு நல்லாட்சி வழங்கப்படும் என்ற உறுதியினையும் அளித்தது. அதன்பிறகு நடைபெற்ற இந்திய தேசிய இயக்கத்தின் பின்னனியில் இந்திய அரசியலமைப்பில் முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.

1858 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம்

1858 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் நிறைவேற்றியது. 1858 ஆகஸ்டு 2 ஆம் நாள் அரச அனுமதியையும் இச்சட்டம் பெற்றது. இச்சட்டத்தின் முக்கிய பிரிவுகள்

- கிழக்கிந்திய வணிகக்குழுவின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்தியாவின் ஆட்சி அரசியின் நேரடிக்கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டது.

- இங்கிலாந்தில், இயக்குநர்கள் குழுவும், கட்டுப்பாட்டு வாரியமும் கலைக்கப்பட்டன. அவற்றுக்குப்பதில் இந்தியாவுக்கான அயலுறவுச் செயலர் ஒருவர் நியமிக்கப்பட்டார் அவருக்கு ஆலோசனை வழங்க 'இந்தியா கவுன்சில்' என்ற அமைப்பும் ஏற்படுத்தப்பட்டது. அயலுறவுச் செயலர் பிரிட்டிஷ் அமைச்சரவையில் உறுப்பினராக இருப்பார். இந்தியாவுக்கான முதல் அயலுறவுச் செயலராக சர் சார்லஸ் வுட் நியமிக்கப்பட்டார். இந்தியா கவுன்சிலில் 15 உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர்.

- இந்தியாவின் தலைமை ஆளுநர் இந்தியாவின் வைஸ்ராய் (அரசுப் பிரதிநிதி) என்ற பொறுப்பையும் வகிப்பார். இந்தியாவின் முதல் வைஸ்ராயாக நியமிக்கப்பட்டவர் கானிங் பிரபு ஆவார்.

- இச்சட்டம் ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை அப்படியே ஏற்றுக் கொண்டது.

 

விக்டோரியா அரசியின் அறிக்கை (1858)

1858 நவம்பர் 1 ஆம் நாள் விக்டோரியா அரசியின் அறிக்கையை அலகாபாத் நகரில் கானிங் பிரபு அறிவித்தார். இந்த அரச அறிக்கை இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பல்வேறு முக்கிய இடங்களில் பொது மக்கள் முன்னிலையில் படிக்கப்பட்டது. இந்தியாவில் வணிகக் குழுவின் ஆட்சி முடிவுக்கு வந்ததையும் அரசியார் ஆட்சிப் பொறுப்பை தாமே மேற்கொண்டதையும் இந்த அறிக்கை குறிப்பிட்டது. இந்திய அரசர்களுடன் வணிகக்குழு செய்து கொண்டிருந்த உடன்படிக்கைகளை ஒப்புக் கொண்டதுடன் அவர்களது உரிமைகள், கண்ணியம், மதிப்பு ஆகியவற்றை மதித்து நடப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டது. சமமான மற்றும் பாரபட்சமற்ற சட்டப்பாதுகாப்பு தங்களது சமய மற்றும் சமூக பழக்கவழக்கங்களை பின்பற்றுவதற்கான உரிமை ஆகியன இந்திய மக்களுக்கு வழங்கப்படும் என்று அந்த அறிக்கை கூறியது. விக்டோரியா அரசியின் அறிக்கை 1858 ஆம் ஆண்டு சட்டத்திற்கு செயல்வடிவம் கொடுப்பதாக அமைந்தது.

இந்திய கவுன்சில்கள் சட்டம் (1861)
 

 
 

1861 ஆம் ஆண்டு இந்திய கவுன்சில்கள் சட்டம் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவிலிருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை நான்கிலிருந்து ஐந்தாக உயர்த்தியது. மேலும், தலைமை ஆளுநரின் நிர்வாகக்குழு மத்திய சட்டமன்றமாக விரிவுபடுத்தப்பட்டது. ஆறு முதல் பன்னிரண்டு "கூடுதல் உறுப்பினர்கள்" தலைமை ஆளுநரால் நியமிக்கப்படுவர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அலுவலர் அல்லாதவர்களாக இருப்பர். இதனால் சட்டமன்றத்தில் இந்தியர்களை சேர்ப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டது. இந்த உறுப்பினர்களின் பணி சட்டமியற்றுவது மட்டுமே என்று தெளிவாகக் கூறப்பட்டது. நிர்வாகக் குழுவின் செயல்பாடுகளில் தலையிட இவர்களுக்கு உரிமையில்லை. நிர்வாகம் மற்றும் நிதி குறித்த அதிகாரங்கள் இவர்களுக்கு வழங்கப்படவில்லை.

மாகாணங்களிலும் இதேபோல் சட்டமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. மாகாணங்களில் கூடுதல் உறுப்பினர்களின் எண்ணிக்கை நான்கு முதல் எட்டாக நிர்ணயிக்கப்பட்டது. முதன்முதலாக இந்தியர்களுக்கு சட்டமியற்றும் பணியில் பங்கெடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டதால் அரசியலமைப்பின் வளர்ச்சியில் இச்சட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவில் சட்டமியற்றும் முறை மெதுவாகத் தொடங்கி, 1892 மற்றும் 1909 ஆம் ஆண்டு சட்டங்களின் மூலம் மேலும் வளர்ச்சிபெற்றது.
 

இந்திய கவுன்சில்கள் சட்டம்

1892 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய கவுன்சில்கள் சட்டத்தை இந்திய தேசிய காங்கிரகக்கு கிடைத்த முதல் வெற்றி என்று கருதலாம். மத்திய சட்டமன்றலிருந்த கூடுதல் உறுப்பினர்களின் எண்ணிக்கையை இச்சட்டம் மேலும் உயர்த்தியது. அவர்களது எண்ணிக்கை குறைந்தது பத்து என்றும் அதிகபட்சம் பதினாறு என்றும் நிர்ணயிக்கப்பட்டது. அலுவலர் அல்லாதோரின் விகிதமும் அதிகரிக்கப்பட்டது. 16 பேரில் 6 பேர் அலுவலர்கள். 10 பேர் அலுவலர் அல்லாதவர்கள். அரசின் வரவு, செலவு அறிக்கை மற்றும் நிதிக்கொள்கை பற்றி விவாதிக்க கூடுதல் உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல் மாகாண சட்டமன்றங்களிலும் கூடுதல் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. கூடுதல் அதிகாரமும் வழங்கப்பட்டது.

மின்டோ - மார்லி சீர்திருத்தங்கள்

1909 ஆம் ஆண்டு இந்திய கவுன்சில்கள் சட்டம் மின்டோ - மார்லி சீர்திருத்தங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவுக்கான அயலுறவுச் செயலர் மார்லி பிரபு, இந்தியாவின் தலைமை ஆளுநர் மின்டோ பிரபு. இவ்விருவரும் இச்சட்டம் கொண்டு வரப்படுவதற்கு காரணமாக இருந்தனர். காங்கிரசிலிருந்து மிதவாதிகளை திருப்திப்படுத்தும் நோக்கத்துடன் இச்சட்டம் நினறவேற்றப்பட்டது. இச்சட்டத்தின் முக்கிய பிரிவுகள்:

1. மத்திய சட்டசபையிலிருந்த கூடுதல் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகபட்சம் 60 ஆக உயர்த்தப்பட்டது. இவர்களில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆகும். மீதமுள்ள நியமிக்கப் பட்டவர்கள் 33 பேரில் 28 பேர்களுக்குமேல், அதிகாரிகள் இருக்கக் கூடாது என்று விதிக்கப்பட்டது.

2. சட்டமன்றங்களுக்கு தேர்தல் என்ற கருத்து சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், முஸ்லீம்களுக்கு சாதகமாக இருக்கும் பொருட்டு முதன்முறையாக வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் கொண்டுவரப்பட்டது. முஸ்லிம்களுக்கு தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

3. பெரிய மாகாணங்களின் சட்டமன்றங்களில் இருந்த கூடுதல் உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்த்தப்பட்டது.

4. வரவு - செலவு அறிக்கை மற்றும் பொதுமக்கள் நலன் குறித்த விவகாரங்களைப்பற்றி விவாதிக்கவும், தீர்மானங்கள் நிறைவேற்றவும் சட்டமன்றங்களுக்கு உரிமை வழங்கப்பட்டது. ஆனால் வரவு செலவு அறிக்கை மீதான விவாதத்திற்கு தலைமை ஆளுநர் அனுமதி அளிக்க மறுக்கலாம்.

5 தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் முதன் முறையாக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவ்வாறு நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் எஸ்.பி. சின்ஹா என்பவராவார்.

6. பம்பாய் மற்றும் சென்னை மாகாணங்களில் நிர்வாகக் குழு உறுப்பினர் எண்ணிக்கை 2 லிருந்து 4 ஆக உயர்த்தப்பட்டது. இந்தியர்களை இப்பதவிகளுக்கு நியமிக்கும் வழக்கமும் தொடங்கியது.

7. இங்கிலாந்திலிருந்த இந்தியா கவுன்சிலிலும் இரண்டு இந்தியர்கள் இடம் பெற்றனர்.

இந்தியாவில் ஒரு நாடாளுமன்ற அரசாங்க முறையை ஏற்படுத்தும் நோக்கம் மின்டோ-மார்லி சீர்திருத்தங்களுக்கு கிடையாது. இருப்பினும், இது தாராளமான நடவடிக்கையே என்று கருதிய மிதவாதிகள் இந்த சீர்திருத்தங்களை வரவேற்றனர். தனித்தொகுதிகளை ஒதுக்குதல் என்ற கோட்பாடு 1947 ஆம் ஆண்டு இந்தியப் பிரிவினைக்கு இட்டுச் சென்றது.

மான்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள்


முதல் உலகப் போர் காலத்தில் நடைபெற்ற தன்னாட்சி இயக்கம் போன்ற அரசியல் நடவடிக்கைகளின் பலனாக ஆகஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்டது. 1917 ஆகஸ்டு 20 ஆம் நாள் இந்தியாவிற்கான அயலுறவுச் செயலர் மான்டேகு, காமன்ஸ் சபையில் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டார். இந்தியாவில் படிப்படியாக பொறுப்புள்ள அரசாங்கம் அறிமுகப்படுத்தப்படும் என்று அவரது அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டது. அதன் முதல் தவணையாக இங்கிலாந்து நாடாளுமன்றம் 1919 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தை நிறைவேற்றியது.


இந்த சட்டமே மான்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் என அழைக்கப்படுகிறது. அப்போது இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்தவர் செம்ஸ்போர்டு பிரபு ஆவார்.

இந்த சட்டத்தின் முக்கிய கூறுகள்:

1. மாகாணங்களில் இரட்டையாட்சி நடைமுறைப்படுத்தப்பட்டது. மாகாண அதிகாரங்கள் யாவும் "ஒதுக்கப்பட்ட துறைகள்" எனவும் "மாற்றப்பட்ட துறைகள்" எனவும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. ஒதுக்கப்பட்ட துறைகளின்கீழ் காவல்துறை, சிறைச்சாலைகள், நிலவருவாய், நீர்ப்பாசனம், வனங்கள் போன்ற துறைகளும் மாற்றப்பட்ட துறைகளின் கீழ், கல்வி, உள்ளாட்சி அமைப்புகள், பொது ககாதாரம், துப்புரவு, வேளாண்மை மற்றும் தொழில்கள் போன்ற துறைகளும் இருந்தன. ஒதுக்கப்பட்ட துறைகள் ஆளுநர் மற்றும் அவரது நிர்வாகக் குழுவின் நிர்வாகத்தில் இயங்கின. மாற்றப்பட்ட துறைகளை ஆளுநரும் அவரது அமைச்சர்களும் நிர்வகித்தனர்.

2. மத்தியில் இரண்டு அவைகளைக் கொண்ட சட்டமன்றம் ஏற்படுத்தப்பட்டது. மாநிலங்களவை என்றும் சட்டப்பேரவை என்றும் இவை அழைக்கப்பட்டன. சட்டப்பேரவையில் இருந்த மொத்தம் 145 உறுப்பினர்களில் 105 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகவும் எஞ்சிய 40 பேர் நியமிக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர். மாநிலங்களவையிலிருந்த அதிகபட்ச உறுப்பினர்களான 60 பேரில் 34 பேர் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். எஞ்சிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டவர்கள்.

3. இந்தியாவுக்கான அயலுறவுச் செயலர் மற்றும் அவரது உதவியாளர்களுக்கான ஊதியம் இனி பிரிட்டிஷ் வருவாயிலிருந்தே அளிக்கப்படும். இதுவரை, இந்திய வருவாயிலிருந்தே அவர்களுக்கு ஊதியம் அளிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

4. லண்டனில் இந்தியாவுக்கான உயர் ஆணையர் (தூதர்) ஒருவர் நியமிக்கப்பட்டார்.

இந்த சட்டத்தின் மிகப்பெரிய குறைபாடு மாகாணங்களில் கொண்டு வரப்பட்ட இரட்டையாட்சி முறையின்கீழ் அதிகாரங்கள் பிரிக்கப்பட்டதேயாகும்.

1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்

சைமன் குழு அளித்த அறிக்கை, வட்டமேசை மாநாடுகளின் நடவடிக்கைகள் மற்றும் 1933 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் அளித்த வெள்ளை அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் 1935 ஆண்டு இந்திய அரசுச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1919 ஆம் ஆண்டு சட்டத்தில் இந்த சட்டம் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது.

இச்சட்டத்தின் சிறப்புக் கூறுகள் வருமாறு

1. பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்த மாகாணங்கள் மற்றும் சுதேச அரசுகள் அடங்கிய அனைத்திந்திய கூட்டாட்சி ஒன்று மத்தியில் உருவாக்க வழிவகை செய்யப்பட்து. (சுதேச அரசுகள் இதற்கு உடன்பட மறுத்தமையால் கூட்டாட்சி உருவாக்கப்படவில்லை).

2. மத்திய அரசின் அதிகாரங்கள் மூன்று பட்டியல்களாக பிரிக்கப்பட்டது - கூட்டாட்சிப் பட்டியல், மாகாண பட்டியல் மற்றும் பொதுப் பட்டியல்.


3. மத்தியில் இரட்டையாட்சி கொண்டு வரப்பட்டது. ஒதுக்கப்பட்ட துறைகள் தலைமை ஆளுநர் மற்றும் அவரது நிர்வாகக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்தன. மாற்றப்பட்ட துறைகள் அமைச்சரவையின் பொறுப்பில் விடப்பட்டன.

4. மாகாணங்களில் இரட்டையாட்சி ஒழிக்கப்பட்டு, மாகாண சுயாட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. மாகாண நிர்வாகக்குழுவின் தலைவராக ஆளுநர் இருப்பார். அமைச்சரவையின் ஆலோசனைகளின்பேரில் அவர் நிர்வாகத்தை நடத்துவார். எனவே மாகாண அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களின் பொறுப்பில் விடப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சட்டப்பேரவைக்கு அவர்கள் பொறுப்புள்ளவர்களாவர்.

5. வங்காளம், சென்னை, பம்பாய், ஐக்கிய மாகாணம், பீகார் மற்றும் அஸ்ஸாம் மாகாணங்களில் இரண்டு அவைகளைக் கொண்ட சட்டமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

6. சீக்கியர்கள், ஐரோப்பியர்கள், இந்திய கிறித்துவர்கள் மற்றும் ஆங்கிலோ இந்தியர்களுக்கும் தனித்தொகுதி முறை விரிவு படுத்தப்பட்டது.

7. ஒரு தலைமை நீதிபதி, ஆறு நீதிபதிகள் கொண்ட கூட்டாட்சி நீதிமன்றம் டெல்லியில் நிறுவப்பட்டது.

மாகாண சுயாட்சி பல இடங்களில் வெற்றிகரமாக செயல்படவில்லை அமைச்சர்களின் ஆலோசனைகளை ஆளுநர் கட்டாயமாக கேட்டு நடக்க வேண்டியதில்லை என்ற நிலையே இதற்குக் காரணம். மாகாண அரசின் உண்மையான அதிகாரம் ஆளுநரிடமே இருந்தது. இத்தகைய குறைபாடுகள் இருந்த போதிலும் காங்கிரஸ் கட்சி நடக்கவிருந்த மாகாண சட்டமன்றத் தேர்தல்களில் கலந்து கொள்வது என முடிவெடுத்தது. முந்தைய சட்டங்களைவிட இச்சட்டம் இந்தியர்களுக்கு முற்போக்கானதாக காணப்பட்டது.

1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டப்படி 1937 பிப்ரவரியில் மாகாண சட்ட மன்றங்களுக்கு தேர்தல்கள் நடைபெற்றன. காங்கிரஸ் இத்தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்றது. 1937 ஜூலை 7 ஆம் நாளன்று தலைமை ஆளுநர் லின்லித்கோ பிரபு அளித்த ஒத்துழைப்பை அடுத்து ஏழு மாகாணங்களில் காங்கிரஸ் கட்சி அமைச்சரவைகளை அமைத்தது.

 

 

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY