Ads Right Header

முயற்சியால் தேடி வந்த 12  அரசுப்பணி!


அரசு வேலையில் எப்படியாவது அமர்ந்துவிடவேண்டும் என்பதுதான் பெரும்பாலானவர்களின்... கனவு.! ஆனால் "அரசு வேலை' பலருக்கும் வெறுங்கனவாகவே அமைந்துவிடுகிறது.

முயற்சியால் ஒரு அரசு வேலை என்ன ...பன்னிரண்டு அரசு வேலையை அடுத்தடுத்துப் பெற்றுள்ளார் ராஜஸ்தான் பிகானீரைச் சேர்ந்த பிரேம் ஸூக் டெலு. அநேகமாக இந்தியாவில் வேறு யாரையும் அரசு வேலைகள் இப்படி துரத்திப் பிடிக்க முயற்சிகள் செய்திருக்கமாட்டார்கள். பிரேமின் வெற்றிக் கதை இதுதான்.

"நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஏழ்மையான குடும்பம். ஒட்டகம் பூட்டிய வண்டியை அப்பா ஓட்டிக் கொண்டிருந்தார். சாமான்களை ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு கொண்டு போவதுதான் அப்பாவின் வேலை.

நானும் ஒய்வு நேரங்களில் விடுமுறை நாள்களில் ஆடு, மாடுகளை மேய்ப்பேன். வீட்டில் உள்ள வறுமையை போக்க நல்ல வேலை அவசியம். நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றால் நன்றாகக் படிக்க வேண்டும் என்று மனதில் பதிந்துபோனது. உள்ளூர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்தேன்.

பிகானீரில் உள்ள அரசு கல்லூரியில் சரித்திரம் முதுகலை படித்து தங்கப் பதக்கத்துடன் வெற்றி பெற்றேன். பட்டப்படிப்பு முடித்ததும் செய்தித் தாள்களில் வரும் போட்டித் தேர்வுகள் அனைத்திற்கும் மனு செய்தேன். முதுநிலை படிப்பை முடித்ததும், நெட் தேர்வு, , இளநிலை ஆராய்ச்சியாளருக்கான தேர்வு இரண்டிலும் வெற்றி பெற்றேன். தொடக்கத்தில் கிராம நிர்வாக அதிகாரி வேலை கிடைத்தது. உள்ளூர் வேலை என்றாலும் எனக்கு திருப்தி இல்லை. கை நிறைய சம்பளம் கிடைக்கும் உயர்ந்த பதவி எனது இலக்காக இருந்தது.

அப்படித்தான் முதலில் கிராம நிர்வாக அதிகாரி பதவிக்கு மனு செய்து போட்டித் தேர்வினை எழுதினேன். வேலையும் கிடைத்தது. இன்னும் முயற்சி செய்தால் உயர்ந்த வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது. கிராம சேவகர் பதவிக்கு தேர்வு எழுதினேன். தேர்வு பெற்றேன். அதற்கு பிறகு உதவி சிறை அதிகாரி பதவிக்கு போட்டித் தேர்வு எழுதி, மாநிலத்திலேயே இரண்டாவதாக வந்தேன். அந்தப் பதவியில் சேருமுன், நடுவில் எழுதியிருந்த துணை காவல் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

இதற்கிடையில் கல்லூரியில் விரிவுரையாளர் பதவி தேடி வந்தது. எனது அண்ணா ராஜஸ்தான் காவல்துறையில் காவலராக பணிபுரிகிறார். அவர்தான் "ஐஏஎஸ், ஐபிஎஸ் போட்டி தேர்வுகள் எழுது' என்று ஊக்கம் கொடுத்தார். அப்போதுதான் இந்திய ஆட்சியத் தேர்வு எழுதி ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்று தீர்மானித்தேன்.

விரிவுரையாளராக பணிபுரிந்த போது கோட்ட ஆட்சியாளர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அந்தப் பணியில் சேர்ந்து, தொடர்நது ஐஏஎஸ் தேர்வுகளுக்கு என்னைத் தயார் செய்து கொண்டேன்.

தேர்வினை ஹிந்தியில் எழுதினேன். இரண்டாவது முயற்சியில் ஐபிஎஸ் காவல்  அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். 2015-இல் குஜராத்தில் என்னை காவல் அதிகாரியாக நியமித்தார்கள். 2010-இல் தொடங்கிய நல்ல வேலை தேடும் படலம் 2015 -இல் நிறைவேறியது. அப்போது எனக்கு வயது 27. காவல் அதிகாரியாக ஆறு ஆண்டுகள் அனுபவம் உள்ளது...' என்கிறார் 33 வயதாகும் பிரேம் ஸூக் டெலு.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY