Ads Right Header

தங்கும் வசதிகளுடன் குடிமைப்பணி முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி' - தலைமைச்செயலாளர்.


மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட அகில இந்தியக் குடிமைப் பணிக்கான முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற அனைவரையும் அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் வாழ்த்துவதாகத் தலைமைச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

 
தலைமைச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் உள்ள பசுமை வழிச்சாலையில் இயங்கிவரும் அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம், கடந்த 56 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்த மையம், தமிழக இளைஞர்களுக்குக் குறிப்பாகக் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறது. ஆண்டுதோறும் குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய நிர்வாகத்தில் உயர்நிலையினை அடையும் வகையில், இங்குப் பயிலும், மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது. இப்பயிற்சி மையத்தில் பசுமைச் சூழலுடன் வகுப்பறைகள், தங்கும் இடவசதி, தரமான உணவு வழங்கும் விடுதி, சிறந்த நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமைந்துள்ளன. மாணவர்களுக்கு இங்குக் கட்டணமின்றி உணவு அருந்தவும், அருமையான இயற்கைச் சூழலில் தங்கிப்படிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறந்த பயிற்றுநர்களைக்கொண்டு பயிற்சி அளிப்பதுடன், மாணவர்கள் தங்களை முதன்மைத் தேர்விற்குத் தயார்ப்படுத்திக்கொள்ளும் வகையில் மாதிரித்தேர்வுகளும் நடத்தப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், முதன்மைத்தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு மாதம் ரூபாய் மூன்றாயிரம் (ரூ.3000/-) ஊக்கத் தொகையும் அளிக்கப்படுகிறது எனவும், தமிழக மாணவர்கள் எங்குப் பயிற்சி பெற்று முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும், இந்தப் பயிற்சி மையத்தில் பயிற்சிபெற அனுமதிக்கப்படுவார்கள். இந்த மையத்தில், இந்த ஆண்டு (2022), 225 பேர் தங்கிப் பயிலச் சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அகில இந்தியக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் சேர விரும்பும் தேர்வர்கள் 24.06.2022 (வெள்ளிக்கிழமை) மாலை 6.00 மணி முதல் 27.06.2022 (திங்கள்கிழமை) மாலை 06.00 மணி வரையில் http://www.civilservicecoaching.com என்ற இணையத்தில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY