Ads Right Header

FIR பதியப்பட்டால் அரசு வேலை கிடைக்காதா? தவறு செய்யாதபோது FIR-ஐ நீக்குவது எப்படி?



அரசு வேலைக்கு ஏராளமானோர் விண்ணப்பிக்கிறார்கள். அப்படி விண்ணப்பிப்பவர்களைத் தேர்வுகள் நடத்தி தகுதி பெற்றவர்களை அரசுப் பணியமர்த்துகிறது. 

விண்ணப்பிப்பவரின் குற்றப் பின்னணி மற்றும் ஒழுக்கம் குறித்துத் தெரிந்து கொள்ளவே 'FIR பதியப்பட்டுள்ளதா?' என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. ஒருவர்மீது FIR பதியப்பட்டாலே அரசு வேலை கிடைக்காதா என்ற கேள்விக்கான பதிலை வழக்கறிஞர் பாலமுருகனிடம் கேட்டோம்.

அவர்கூறியதாவது, "FIR பதியப்பட்டாலே அரசு வேலை கிடைப்பதற்கு சிக்கல் ஏற்படுமா என்பது எந்தக் குற்றத்திற்காக FIR பதியப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து மாறுபடும். ஓவர் ஸ்பீட், லைசன்ஸ் இல்லாதது, பெட்டி கேஸ், இதைப் போன்ற வழக்குகளில் பதியப்படும் FIR மற்றும் சிவில் வழக்குகளில் பதியப்படும் FIR -ஆல் அரசு வேலை கிடைப்பதில் எந்த பாதிப்பும் இல்லை. குற்றவியல் (Criminal -கிரிமினல்) குற்றங்கள் புரிந்தவர் என்ற அடிப்படையில் ஒருவர் மீது பதியப்படும் FIR அரசு வேலை கிடைப்பதில் பிரச்சனை ஏற்படுத்தலாம்

செய்யாத குற்றத்திற்காக ஒருவர் மீது FIR பதியப்பட்டால்?

புகார்தாரர் அளிக்கும் புகாரின் அடிப்படையில் பதியப்படுவது தான் முதல் தகவல் அறிக்கை (First Information Report -FIR). அந்தப் புகாரை காவல்துறை விசாரித்து, விசாரணை முடிவுகளைக் குற்றப் பத்திரிக்கையாக (Charge Sheet) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும். ஒருவர்மீது FIR பதியப்பட்டால் அவர் குற்றம் சாட்டப்பட்டவர். FIR-ல் அளித்திருக்கும் புகாரை காவல்துறை விசாரித்த பிறகு அவர் குற்றத்தில் சம்பந்தப்படவில்லை என விசாரணை முடிவுகள் வந்தால் குற்றப் பத்திரிக்கையில் அது குறித்து விளக்கம் அளித்து FIR-ல் இருந்து அவர் பெயர் நீக்கப்படும். இதே போல் FIR-ல் குறிப்பிடாத நபர்கள் குற்றத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்தால் குற்றப் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டு அவர்கள் பெயர்கள் FIR-ல் சேர்க்கப்படும். குற்றங்களை அவர் தான் செய்தார் என நீதிமன்றத்தில் நிரூபணமானால் தான் அவர் குற்றவாளி.

செய்யாத குற்றத்திற்காகவோ, சந்தேக அடிப்படையிலோ ஒருவர் மீது FIR பதியப்படுகிறது. விசாரணையில் அவர் எந்தவகையிலும் குற்றத்தில் ஈடுபடவில்லை எனத் தெரிந்து குற்றப் பத்திரிக்கையில் அவர் பெயர் இடம் பெறவில்லை என்றால் எந்த பிரச்னையும் இல்லை. அல்லது நீதிமன்ற விசாரணையில் நிரபராதி என நிரூபணமானாலும் எந்தச் சிக்கலும் இல்லை. FIR பதிவதற்கு முன்பே எதிர்த்தரப்பு புகாரைத் திரும்பப் பெற்றுக் கொண்டால் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் நீதிமன்றத்திற்கு வழக்கு சென்ற பிறகு எதிர்த்தரப்புடன் சமரசம் அல்லது தீர்வு கண்டு விடுவிக்கப்பட்டால் அரசு வேலை கிடைப்பதில் பிரச்னை உண்டு. கிரிமினல் வழக்குகளிலும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், அரசாங்க சொத்துக்களை சேதப்படுத்துதல், தொடர் குற்றங்கள், கொடுங்குற்றங்கள் புரிவது போன்ற குற்றங்கள் புரிந்திருந்தால் அரசு வேலை கிடைக்காது. ஒருவர்மீது வழக்குகள் நிலுவையிலிருந்தாலும் வேலை கிடைக்காது. நிலுவையில் உள்ள வழக்குகளிலிருந்து விடுபட்ட பிறகே வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. காவல்துறை போன்ற சீருடை பணியாளர்களை நியமிக்கும் பொழுது அவர்கள் குற்றப் பின்னணி கூடுதல் கவனத்தோடும், தீவிரமாகவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். சட்டத்தை நிலைநிறுத்த வேண்டிய பணியில் இருப்பதால் அவர் நேர்மையானவராகவும், எந்த குற்றப் பின்னணியும் இல்லாதவராகவும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படும்.

சிறைத் தண்டனையில் இருக்கும் நபருக்கு வேலை கிடைக்காது. சிறை தண்டனை அனுபவித்தவராக இருந்தாலும், ஒருவரை இருமுறை தண்டிக்கச் சட்டத்தில் இடமில்லை எனக் கருதி தண்டனைக் காலம் முடிந்த பிறகு வேலை கிடைக்கலாம்.

கிரிமினல் வழக்குகள் மட்டுமல்ல, எந்த வழக்கு சம்பந்தப்பட்ட FIR ஒருவர் மீது பதியப்பட்டிருந்தாலும், அதை அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும் பொழுது குறிப்பிட வேண்டும். 'இது தான் கொடுங்குற்றம் இல்லையே' என நினைத்து தன் மீதுள்ள FIR -ஐ ஒருவர் குறிப்பிடாமல் விட்டாலோ, மறைத்தாலோ, போலீஸ் விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்டு தகுதி நீக்கத்திற்கு ஆளாவார்கள். பொய் புகார் என விசாரணையில் தெரிய வரும் நிலையில் காவல்துறையே FIR-ஐ ரத்து செய்துவிடும். அப்படி ரத்து செய்யாத நிலையில் பிரதிவாதி உயர் நீதிமன்றத்தை அணுகி FIR-ஐ ரத்து செய்ய மனு அளிக்கலாம். நீதிமன்றம் விசாரித்துப் பிரதிவாதி மீது பொய்யாக வழக்கு தொடரப்பட்டிருக்கிறது எனக் கருதினால் FIR-ஐ ரத்து செய்யலாம். இல்லையேல் வழக்கை இன்னும் விசாரிக்கவேண்டும் எனக் கருதி கீழ் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கலாம்.

With Regards
டாக்டர் Tai PANDIAN,B.A.,B.L.,PGDFM.,PGDPT.,
வழக்கறிஞர் / உறுதிமொழி ஆணையர் - MHC
Founder - Tai
Post Box No. 6932, Chennai - 600078
Contact No. 730518773/8838447683
E-mail: tai.advocatepandian@gmail.com
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY