Ads Right Header

ரிக்வேத காலம் (அல்லது) முந்தைய வேதகாலம்!



ரிக்வேத காலம் 
( அல்லது ) முந்தைய வேதகாலம் 
( கி.மு.1500 - கி.மு.1000 ) 

ரிக் வேத காலத்தில் , ஆரியர்கள் பெரும்பாலும் சிந்துப் பகுதியிலேயே வாழ்ந்தனர் . ரிக் வேதத்தில் ' சப்த சிந்து ' அல்லது ஏழு நதிகள் பாயும் பகுதி என்ற குறிப்பு வருகிறது . பஞ்சாபில் பாயும் ஜீலம் , சீனாப் , ராவி , பியாய் , சட்லஜ் என்று ஐந்து நதிகளோடு சிந்து மற்றும் சரஸ்வதி ஆகிய ஏழு நதிகளையே இது குறிக்கிறது . ரிக் வேதப் பாடல்களிலிருந்து ரிக்வேதகால மக்களின் அரசியல் , சமூக பண்பாட்டு வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ளலாம் .

ரிக்வேத கால அரசியல்

குலம் அல்லது குடும்பம் என்பதே ரிக் வேதகால அரசியலுக்கு அடிப்படையாக இருந்தது . பல குடும்பங்கள் இணைந்து கிராமம் உருவாயிற்று . கிராமத்தின் தலைவர் கிராமணி எனப்பட்டார் . பல கிராமங்கள் இணைந்து விசு என்ற அமைப்பு தோன்றியது . இதன் தலைவர் ' விஷயபதி ' , மிகப்பெரிய அரசியல் ஒருங்கிணைப்பு “ ஜன ' எனப்பட்டது .

ரிக்வேத காலத்தில் பரதர்கள் , மத்ச்யர்கள் , யதுக்கள் , புருக்கள் போன்ற பல்வேறு அரச குலங்கள் இருந்தன . அரசின் தலைவன் ராஜன் . ரிக்வேத காலத்தில் பெரும்பாலும் முடியாட்சி முறையே வழக்கிலிருந்தது . பரம்பரை வாரிசு முறையே பின்பற்றப்பட்டது . நிர்வாகத்தில் அரசனுக்கு உதவியாக புரோகிதரும் , சேனானி என்ற படைத்தளபதியும் இருந்தனர் .

சபா , சமிதி என்ற இரண்டு புகழ்வாய்ந்த அவைகளும் இருந்தன . சபா என்பது ஊர்ப்பெரியோர் அடங்கிய அவையாகவும் , சமிதி என்பது பொது மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அவையாகவும் விளங்கின .

சமூக வாழ்க்கை

தந்தை வழியை அடிப்படையாகக் கொண்டதே ரிக்வேத கால சமூகம் .
சமூகத்தின் அடிப்படையாக விளங்கியது கிரஹம் அல்லது குடும்பம் . குடும்பத்தின் தலைவர் கிரஹபதி . பொதுவாக ஒருதார மணம் வழக்கிலிருந்தது . அரச மற்றும் உயர் குடியினரிடையே பலதார மணமும் நடைமுறையில் இருந்தது . இல்லப் பொறுப்புகளை கவனித்து வந்த மனைவி முக்கிய சடங்குகளிலும் பங்கெடுத்துக் கொள்வது வழக்கம் .

ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் ஆன்மீகம் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியில் சம வாய்ப்புகள் வழங்கப்பட்டன . அபலா , விஸ்வவாரா ,கோசா , லோபமுத்ரா போன்ற பெண் கவிஞர்களும் ரிக்வேத காலத்தில் வாழ்ந்தனர் . பொது அவைகளிலும் பெண்கள் பங்கெடுத்துக் கொண்டனர் .

சிறார் மணமோ உடன்கட்டையேறும் ' சதி ' வழக்கமோ ரிக்வேத காலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது . பருத்தி மற்றும் கம்பளியாலான ஆடைகளை ஆண் பெண் இருபாலரும் அணிந்தனர் . இருபாலரும் பல்வேறு வகையிலான ஆபரணங்களை அணிந்தனர் . கோதுமை , பார்லி , பால் , தயிர் , நெய் , காய்கறிகள் , கனிகள் போன்றவை முக்கிய உணவுப் பொருட்களாகும் .

பசு புனித விலங்காக கருதப்பட்டதால் பசு இறைச்சி உண்பதற்கு தடையிருந்தது . தேரோட்டப்போட்டி , குதிரையோட்டம் , சதுரங்கம் , இசை , நடனம் போன்றவை அவர்களது இனிய பொழுதுபோக்குகள் . பிந்திய வேத காலத்தில் இருந்ததைப்போல ரிக்வேதகால சமூகத்தில் பிரிவுகள் மிகவும் கடுமையானதாக இருக்கவில்லை .

பொருளாதார நிலைமை

மேய்ச்சல் நில மக்களாக விளங்கிய ரிக்வேத காலமக்களின் முக்கியத் தொழில் கால்நடை வளர்ப்பாகும் . கால்நடைகளை அடிப்படையாகக் கொண்டே அவர்களது செல்வம் மதிப்பிடப்பட்டது . வடஇந்தியாவில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழத் தொடங்கிய பின்னர் வேளாண் தொழிலை மேற்கொண்டனர் .

இரும்பின் பயனை நன்குணர்ந்திருந்த அவர்களால் வெகு எளிதாக காடுகளை திருத்தி பரவலான விளை நிலங்களை உருவாக்க முடிந்தது . மற்றொரு முக்கியத் தொழில் தச்சுவேலை . காடுகளை அழிக்கும்போது கிடைத்த ஏராளமான மரங்களால் இத்தொழில் பெரிதும் பயன்பெற்றது . தேர்கள் , கலப்பைகள் போன்றவற்றை தச்சர்கள் உற்பத்தி செய்தனர் .

உலோகக் கலைஞர்கள் செம்பு , வெண்கலம் மற்றும் இரும்பாலான பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்தனர் . நூல் நூற்றல் மற்றொரு முக்கிய தொழிலாகும் . பருத்தி மற்றும் கம்பளி ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டன . பொற்கொல்லர்கள் ஆபரணங்களையும் , குயவர்கள் வீட்டு உபயோகத்திற்கான மட்பாண்டங்களையும் உற்பத்தி செய்தனர் .

வணிகம் மிகமுக்கிய பொருளாதார நடிவடிக்கையாகும் . நதிகள் போக்குவரத்துக்கு பெரிதும் உதவின . பண்டமாற்று முறையிலேயே வணிகம் நடைபெற்றது . காலப்போக்கில் ' நிஷ்கம் ' என்ற தங்க நாணயங்கள் பெரும் வர்த்தகங்களில் செலாவணியாக பயன்படுத்தப்பட்டன .

சமயம்

நிலம் , நெருப்பு , காற்று , மழை , இடி மின்னல் போன்ற இயற்கை சக்திகளை ரிக்வேத கால மக்கள் வழிபட்டனர் . இவற்றை கடவுளராக உருவகப்படுத்தி வழிபட்டனர் .

பிருதிவி ( பூமி ) , அக்னி ( நெருப்பு ) , வாயு ( காற்று ) , வருணன் ( மழை ) . இந்திரன் ( இடிமின்னல் ) ஆகிய கடவுளர்கள் ரிக்வேத காலத்தில் புகழ் பெற்றிருந்தனர் . முந்தைய வேத காலத்தில் இந்திரன் மிகவும் புகழ்பெற்று விளங்கினான் .

இந்திரனுக்கு அடுத்த நிலையில் இருந்த அக்னி கடவுளருக்கும் மனிதருக்கும் இடையே உறவுப்பாலமாக இருந்தார் . இயற்கைச் சமநிலையை பாதுகாக்கும் கடவுளாக வருணன் விளங்கினார் . ஆதித்தி , உஷஸ் போன்ற பெண் கடவுளரும் இக்காலத்தில் வழிபடப்பட்டனர் . ஆலயங்களோ , சிலை வழிபாடோ முந்தைய வேதகாலத்தில் இல்லை . நற்பயன்களை எதிர்பார்த்து கடவுளருக்கு வழிபாடுகள் செய்யப்பட்டன . நெய் , பால் , தானியம் போன்றவை படைக்கப்பட்டன . வழிபாட்டின்போது பல்வேறு சடங்குகள் பின்பற்றப்பட்டன .

Whatsapp ல் இணைந்திட
Click here to join tnkural.com
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY