Ads Right Header

பல்வேறு மத்திய அரசு பணிகளுக்கு நேர்முகத்தேர்வு ரத்து.


ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதால், 23 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள், சில மத்திய அரசு பணிகளுக்கு நேர்முக தேர்வை ரத்து செய்துள்ளதாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

Interviews-for-federal-government-jobs-canceled-in-31-states

மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-


 

கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையின்போது, சில மத்திய அரசு பணிகளுக்கு நேர்முக தேர்வு முறையை ஒழிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அதை ஏற்று, குரூப் பி (அரசிதழ் பதிவு பெறாதது), குரூப் சி பணியிடங்களுக்கு 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து நேர்முக தேர்வை ரத்து செய்யும் உத்தரவை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டது. தொடக்கத்தில், இந்த உத்தரவை அமல்படுத்த பல மாநிலங்கள் தயங்கின. ஆனால், நேர்முக தேர்வு என்பது ஊழலுக்கும், தங்கள் உறவினர்களுக்கு சலுகை காட்டவும் பயன்படும் என்று எங்கள் அமைச்சகம் விளக்கிக் கூறியது.


 

அதன்பிறகு ஒவ்வொரு மாநிலமும் தயக்கத்தை கைவிட்டு, இந்த உத்தரவை அமல்படுத்தின. தற்போது, 23 மாநிலங்களும், 8 யூனியன் பிரதேசங்களும் சில மத்திய அரசு பணிகளுக்கு நேர்முக தேர்வு நடத்தும் முறையை ரத்து செய்து விட்டன. எழுத்து தேர்வு மதிப்பெண்ணை வைத்து தகுதி அடிப்படையில் ஆள்தேர்வு நடக்கிறது. கவர்னர் ஆட்சி வந்த பிறகு, காஷ்மீரிலும் இதை அமல்படுத்தி இருக்கிறோம். இது, தேசநலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு என்பது நிரூபணமாகி உள்ளது. சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு சமமான போட்டியிடும் வாய்ப்பை இந்த நடவடிக்கை உருவாக்கி உள்ளது. இவையெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பு, கற்பனையே செய்து பார்க்க முடியாத சீர்திருத்தங்கள் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY