Ads Right Header

அரசு வேலைவாய்ப்பு : ஏமாற்ற நிலையில் தமிழ்நாட்டு இளைஞர்கள்!


அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்கள் . கரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள் . முதல் தலைமுறைப் பட்டதாரிகள் . போரில் உடல் தகுதியை இழந்த ராணுவத்தினர் , ஆதரவற்ற விதவைகள் , சாதிமறுப்புத் திருமண தம்பதியர் ஆகியோருக்கு அரசுப் பணிகளில் சுழற்சி முறையில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று திமுக தலைமையிலான அரசு சமீபத்தில் அரசாணை பிறப்பித்துள்ளது . அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் உதவியாளர் பணி நியமனங்களில் 25 % பணியிடங்களை , விதவைகள் , கணவனால் கைவிடப்பட்டோரைக் கொண்டு நிரப்பவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது . 

திமுக அரசின் இத்தகைய நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை . திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அரசுப் பணிகளில் மகளிருக்கு 40 % இடஒதுக்கீடும் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . அதே நேரத்தில் , பாலின அடிப்படையிலான இடஒதுக்கீடு இருபாலருக்குமான வேலைவாய்ப்புச் சமநிலையைக் குலைத்துவிடாதவாறு வகுக்கப்பட வேண்டும் என்ற குரல்களையும் கேட்க முடிகிறது . விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் சிலம்பத்தையும் சேர்த்திருப்பது வரவேற்புக்குரியது . அரசின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத்தரும் போதுதான்  முழுமைபெறும் . 

நீதிமன்றங்களின் உத்தரவுகளை அடுத்து , டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான ஆண்டுத் திட்டம் அறிவிக்கப்படும்போதே தேர்வு முடிவுகளுக்கான உத்தேசக் கால அளவையும் குறிப்பிடுகின்ற வழக்கம் தொடங்கியது . எனினும் , இன்னும் அது முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை . கடந்த 2020 - ல் திட்டமிடப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பெரும்பாலானவை கரோனா காரணமான பொதுமுடக்கத்தால் நடத்தப்படவில்லை . அவை 2021 - க்குத் தள்ளிவைக்கப்பட்ட பிறகும்கூட இன்னும் பெரும்பாலான தேர்வுகள் நடத்தப்படாத நிலைதான் நீடிக்கிறது . ஏற்கெனவே டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்படாத நிலையில் , இரண்டாண்டுகள் மட்டுமே வயது வரம்பு நீட்டிக்கப்பட்டிருப்பது தேர்வர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது . இதற்கிடையில் , ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு தொழில்நுட்பக் கோளாறு , மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கும் வாய்ப்பு , வயது வரம்பு நீட்டிக்கப்பட்டவர்களுக்கான கூடுதல் வாய்ப்பு என்ற அடுத்தடுத்துப் பல காரணங்கள் சொல்லப்பட்டுத் தள்ளிக்கொண்டே போகிறது . பணிநியமனங்கள் தாமதமாவதால் , மாதம் ஒன்றுக்கு ரூ .10,000 என்ற அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகங்களே முதுநிலை ஆசிரியர்களை நியமித்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு , தேர்வுக்குத் தயாரானவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது . அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்புக்களும் அப்படியே . புதிதாகக் கலைக் கல்லூரிகளைத் தொடங்குவதில் ஆர்வம் காட்டும் திமுக அரசு , அவற்றைப் பெயரளவு ஊதியத்தில் கௌரவ விரிவுரையாளர்களைக் கொண்டே நடத்த விரும்புகிறது . நிதிச் சிக்கல்களைக் காரணம் காட்டி அரசு அலுவலகங்களிலும் கல்வி நிறுவனங்களிலும் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் தவிர்ப்பது அரசு நிர்வாகம் , கல்வித் தரம் ஆகியவற்றைப் பாதிப்பது மட்டுமின்றிப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிவரும் இளைஞர்களிடம் அவநம்பிக்கையையும் உருவாக்கிவிடுகிறது . தமிழ்நாடு அரசு உடனடியாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இது .

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY