Ads Right Header

ஆறாம் வகுப்பு தமிழ் இயல் - 8.


8.1 பராபரக் கண்ணி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
தம் + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………….
அ) தம்முயிர்
ஆ) தமதுயிர்
இ) தம்உயிர்
ஈ) தம்முஉயிர்
Answer:
அ) தம்முயிர்

Question 2.
இன்புற்று+இருக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………
அ) இன்புற்றிருக்க
ஆ) இன்புறுறிருக்க
இ) இன்புற்று இருக்க
ஈ) இன்புறு இருக்க
Answer:
அ) இன்புற்றிருக்க

Question 3.
தானென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) தானெ+என்று
ஆ) தான்+என்று
இ) தா+னென்று
ஈ) தான்+னென்று
Answer:
ஆ) தான் +என்று

Question 4.
சோம்பல் என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல் …………..
அ) அழிவு
ஆ) துன்பம்
இ) சுறுசுறுப்பு
ஈ) சோகம்
Answer:
இ) சுறுசுறுப்பு)

நயம் அறிக

Question 1.
பராபரக்கண்ணி பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
பராபரக்கண்ணி பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை, மோனைச் சொற்கள் :
எதுகை :
தம் உயிர்போல் – செம்மையருக்கு
அன்பர்பணி – இன்பநிலை
எல்லாரும் – அல்லாமல்
மோனை :
அன்பர்பணி – இன்பநிலை, தம்உயிர்போல் – தண்டருள்
எல்லாரும் – அல்லாமல், இன்புற்று – இருக்க
அல்லாமல் – அறியேன்

குறுவினா

Question 1.
யாருக்குத் தொண்டு செய்ய வேண்டும்?
Answer:
அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தொண்டு செய்ய வேண்டும்.

Question 2.
இன்பநிலை எப்போது வந்து சேரும்?
Answer:
அன்பர்களுக்குத் தொண்டு செய்பவராகத் தன்னை ஆக்கிவிட்டால் போதும். இன்பநிலை தானே வந்து சேரும்.

சிறுவினா

Question 1.
பராபரக்கண்ணியில் தாயுமானவர் கூறுவன யாவை?
Answer:
(i) அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தொண்டு செய்ய வேண்டும்.
(ii) அன்பர்களுக்குத் தொண்டு செய்பவராகத் தன்னை ஆக்கிவிட்டால் போதும். இன்பநிலை தானே வந்து சேரும்.
(iii) எல்லாரும் இன்பமாக வாழவேண்டும். அதைத்தவிர, வேறு எதையும் நினைக்கமாட்டேன்.

நிரப்புக :
1. நம் முன்னோர்களின் வாழ்க்கை அனுபவங்களை உள்ளடக்கியவை …………………………
2. அற இலக்கியங்கள் கூறும் கருத்துகளைக் கடைப்பிடித்து வாழ்வதே…………………..
3. நம் தமிழ் இலக்கியங்கள் காட்டும் நெறி ………………….
4. பராபரக்கண்ணிப் பாடலை இயற்றியவர் ……………
5. தாயுமானவர் திருச்சியை ஆண்ட ………………………. தலைமைக் கணக்கராகப் பணிப் புரிந்தார்.
6. தாயுமானவர் பாடல்கள் …………………. எனப் போற்றப்படும்.
7. இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல் வகை …………………….
Answer:
1. அற இலக்கியங்கள்
2. சிறந்த வாழ்வு
3. வாழ்வியல் நெறி
4. தாயுமானவர்
5. விசயரகுநாத சொக்கலிங்கரிடம்
6. தமிழ்மொழியின் உபநிடதம்
7. கண்ணி

நூல் வெளி
இப்பாடலை எழுதியவர் தாயுமானவர். திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம் தலைமைக் கணக்கராகப் பணி புரிந்தவர்.

இப்பகுதி தாயுமானவர் பாடல்கள் என்னும் நூலில் உள்ளது. இந்நூலைத் தமிழ் மொழியின் உபநிடதம் எனப் போற்றுவர். இப்பாடல்கள் ‘பராபரக் கணணி’ என்னும் தலைப்பில் உள்ளன. ‘கண்ணி’ என்பது இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல் வகை.

பாடலின் பொருள்

1. அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தொண்டு செய்ய வேண்டும்.

2. அன்பர்களுக்குத் தொண்டு செய்பவராக என்னை ஆக்கிவிட்டால் போதும். இன்பநிலை தானே வந்து சேரும்.

3. எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும். அதைத் தவிர, வேறு எதையும் நினைக்கமாட்டேன்.

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

8.2 நீங்கள் நல்லவர்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
பரிசு பெறும்போது நம் மனநிலை ………………….. ஆக இருக்கும்.
அ) கவலை
ஆ) துன்பம்
இ) மகிழ்ச்சி
ஈ) சோர்வு
Answer:
இ) மகிழ்ச்சி

Question 2.
வாழ்வில் உயர கடினமாக ……………… வேண்டும்.
அ) பேச
ஆ) சிரிக்க
இ) நடக்க
ஈ) உழைக்க
(Answer:
ஈ) உழைக்க

குறுவினா

Question 1.
பழம், வேர் ஆகியவற்றின் இயல்புகள் யாவை?
Answer:
பழத்தின் இயல்பு கொடுப்பது; வேரின் இயல்பு பெறுவது.

Question 2.
உழைக்கும்போது என்னவாக ஆகிறோம்?
Answer:
உழைக்கும் போது நாம் புல்லாங்குழலாகிறோம்.

சிறுவினா

Question 1.
நீங்கள் நல்லவர் என்னும் இப்பாடல் விளக்கும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
நீங்கள் நல்லவர் என்னும் பாடல் விளக்கும் கருத்துகள் :
(i) காலம் மாறிக்கொண்டேதான் இருக்கும். வயது முதிர்ந்தவர் தன் இளம் வயதிற்குத் திரும்பிச் செல்லவியலாது. நேற்று நடந்தது இன்று நடைபெறாது. சிறகுகள் காற்றின் வேகத்திற்குச் சமமாக எழுவது போல் நாம் செயலாற்ற வேண்டும்.

(ii) நீங்கள் உழைக்கின்றபோது புல்லாங்குழலைப் போன்று மாறிவிடுகிறீர்கள். புல்லாங்குழல் அந்தந்தக் காலத்தில் நடைபெறுவனவற்றை ஓரிசையாக மாற்றிவிடுகிறது. உங்களிடம் உள்ள நன்மையைப் பற்றித்தான் பேசமுடியும். தீமைகளைப் பற்றி பேசக்கூடாது.

(iii) நீங்கள் சுயசிந்தனையுடன் ஒன்றுபட்டு இருக்கும்போது நல்லவராக இருக்கின்றீர்கள். என்னைப் போலவே இரு. உன்னிடம் உள்ள எல்லாவற்றையும் முழுமையும் கொடு என்று பழம் வேரைப் பார்த்து நிச்சயமாய் சொல்லாது. பயன் அனைத்தையும் கொடுக்கும் இயல்பு பழத்திற்குண்டு. பெற்றுக் கொள்ளும் இயல்பு வேரினுக்குண்டு.

(iv) நீங்கள் பேசும்போது விழிப்புடன் இருக்க வேண்டும். உங்கள் இலட்சியப் பாதையை நோக்கி நடக்கும் போது எடுத்தச் செயலை உறுதியாக நின்று செயலாற்றி வெற்றி பெற்றால் ‘நீங்கள் நல்லவர்’ என்று பாடல் கூறுகிறது.

1. கலீல் கிப்ரான் ……………… நாட்டைச் சேர்ந்தவர்.
2. ‘நீங்கள் நல்லவர்’ என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல் ………………
3. தீர்க்கதரிசி என்னும் நூலை மொழிபெயர்த்தவர் ………………..
Answer:
1. லெபனான்
2. தீர்க்கதரிசி
3. புவியரசு

நூல் வெளி
கலீல் கிப்ரான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர். கவிஞர், புதின ஆசிரியர், கட்டுரையாசிரியர், ஓவியர் எனப் பன்முக ஆற்றல் பெற்றவர். இப்பாடப் பகுதி கவிஞர் புவியரசு மொழிபெயர்த்த தீர்க்கதரிசி என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆


8.3 பசிப்பிணி போக்கிய பாவை

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு ……………….
அ) இலங்கைத் தீவு
ஆ) இலட்சத் தீவு
இ) மணிபல்லவத் தீவு
ஈ) மாலத் தீவு
Answer:
இ) மணிபல்லவத் தீவு

Question 2.
மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் …………….
அ) சித்திரை
ஆ) ஆதிரை
இ) காயசண்டிகை
ஈ) தீவதிலகை
Answer:
ஆ) ஆதிரை

சொற்றொடரில் அமைத்து எழுதுக

அ) செடிகொடிகள் – செடிகொடிகள் வளர்ப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.
ஆ) முழுநிலவு நாள் – முழுநிலவு நாள் பௌர்ணமி என்று அழைக்கப்படும்.
இ) அமுதசுரபி – அமுதசுரபி அள்ள அள்ளக் குறையாமல் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
ஈ) நல்ல றம் – இல்லறம் சிறக்க ஒவ்வொருவரும் நல்லறச் செயல்களைச் செய்ய

குறுவினா
Question 1.
அமுதசுரபியின் சிறப்பு யாது?
Answer:
அமுதசுரபியில் இட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனைக் கொண்டு எத்தனைப் பேருக்கு வேண்டுமானாலும் உணவு அளிக்கலாம்.

Question 2.
மணிமேகலை மன்னரிடம் வேண்டியது யாது?
Answer:
மணிமேகலை மன்னரிடம் வேண்டியது :
(i) சிறைச்சாலையில் தண்டனை பெற்றுள்ளவர்கள் திருந்தி வாழ வழிகாண வேண்டும்.
(ii) சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும்.

சிறுவினா

Question 1.
மணிபல்லவத்தீவு எவ்வாறு காட்சி அளித்தது?
Answer:
மணிபல்லவத்தீவில் எங்குப் பார்த்தாலும் வெண்மணல் குன்றுகள் இருந்தன. பூத்துக் குலுங்கும் செடிகொடிகள், அடர்ந்த மரங்கள், இடையே பொய்கைகள் ஆகியன இருந்தன. மனதை மயக்கும் காட்சிகளைத் தந்தது.

Question 2.
“கோமுகி” என்பதன் பொருள் யாது?
Answer:
(i) மணிபல்லவத்தீவில் பூக்கள் நிறைந்து விளங்கும் பொய்கைக்குப் பெயர் கோமுகி.
(ii) ‘கோ’ என்றால் பசு. முகி’ என்றால் முகம்.
(iii) பசுவின் முகம் போன்று அமைந்து இருப்பதால் அந்தப் பொய்கை கோமுகி எனப் பெயர் பெற்றது.

நிரப்புக :
1. “தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவோம்.” என்று பாடியவர் ………………..
2. மணிமேகலை …………………. நகரைச் சேர்ந்த வள்.
3. மணிபல்லவத் தீவைப் பாதுகாப்பவள் …………..
4. பசுவின் முகம் போன்று அமைந்த பொய்கையின் பெயர் ………………..
5. கோமுகி நீரின் மேல் தோன்றும் அரிய பாத்திரத்தின் பெயர் ……………
6. அமுதசுரபி தோன்றும் நாள் ……………….. திங்கள் ………………… நாள்.
7. உயிர்களின் பசிபோக்கும் பாத்திரம் …………………
8. கோவலன், மாதவி ஆகியோரின் மகள் ………………………….
9. அமுதசுரபியில் முதலில் உணவை இட்டவள் …………….
10. வாழ்க்கைக்கு அறம் சொன்னவர் ………….
Answer:
1. பாரதியார்
2. பூம்புகார்
3. தீவதிலகை
4. கோமுகி
5. அமுதசுரபி
6. வைகாசித், முழுநிலவு
7. அமுதசுரபி
8. மணிமேகலை
9. ஆதிரை
10. வள்ளுவர்

விடையளி :

Question 1.
தீவதிலகை யார்?
Answer:
(i) தீவதிலகை மணிபல்லவத் தீவில் வாழ்பவள்.
(ii) அவள் அந்தத் தீவையும் அதிலுள்ள புத்த பீடிகையையும் காவல் செய்து வருபவள்.

Question 2.
அமுதசுரபி பற்றி எழுதுக.
Answer:
(i) அமுதசுரபி ஓர் அரிய பாத்திரம். இது கோமுகியின் மேல் வைகாசித் திங்கள் முழு – நிலவு நாளில் தோன்றும்.
(ii) அஃது ஆபுத்திரன் கையிலிருந்தது.
(iii) அந்தப் பாத்திரத்தில் இட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனைக் கொண்டு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் உணவு அளிக்கலாம்.
(iv) இப்பாத்திரத்தைப் பெற்றவள் மணிமேகலை.
(v) இப்பாத்திரத்தில் முதலில் உணவிட்டவள் ஆதிரை.

Question 3.
ஆதிரையிடம் அமுதசுரபியைப் பற்றி மணிமேகலை கூறியது யாது?
Answer:
மணிமேகலை ஆதிரையிடம் இந்தப் பாத்திரம் அள்ள அள்ளக் குறையாமல் உணவு வழங்கும் அமுதசுரபி ஆகும் என்றும், இதனைக் கொண்டு பசியால் வாடும் மக்களுக்கு எல்லாம் உணவு வழங்கப் போகிறேன் என்றும் கூறினாள்.

Question 4.
மணிமேகலை எவருக்கெல்லாம் உணவிட்டாள்?
Answer:
மணிமேகலை அமுதசுரபியைக் கொண்டு, உடல் குறையுற்றோர், பிணியாளர், ஆதரவற்றோர் ஆகியோருக்கு உணவு அளித்தாள். பின்னர்ப் பூம்புகாரில் உள்ள
சிறைச்சாலைக்குச் சென்று அங்கு உள்ளவர்களுக்கும் உணவிட்டாள்.

Question 5.
மன்னரிடம் மணிமேகலை விடுத்த வேண்டுகோள் யாது?
Answer:
வாழ்க்கைக்கு அறம் சொன்ன வள்ளுவர் வாழ்ந்த நாடு இது. புத்தர் பிறந்து அறம் போதித்த பூமி இது. எவை நன்மைகள் எவை தீமைகள் என்பவற்றை எல்லாம் தக்க அறிஞர்களைக் கொண்டு சிறையில் உள்ளவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். மேலும் அவர்களுக்குப் பெற்றோரை மதித்தல், முதியோரைப் பேணல், உறவினர்களை அரவணைத்தல் போன்றவற்றை வலியுறுத்தும் அறநெறிக் கல்வியை அளிக்க வேண்டும். இதுவே மணிமேகலை மன்னரிடம் விடுத்த வேண்டுகோள் ஆகும்.

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆


8.4 பாதம்

Question 1.
பாதம் கதையைச் சுருக்கி எழுதுக.
Answer:
முன்னுரை :
மாரி என்பவர் காலணி தைக்கும் ஒரு தொழிலாளி. அவர் பசியால் வாடிக்கொண்டிருந்தார். திடீரென ஒரு விசித்திரக் காலணியின் மூலம் செல்வந்தர் ஆனார். ஆனாலும் அவர் மனம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அவற்றை விளக்கும் கதையைக் காண்போம்.

வெறிச்சோடிய தெரு :
மாரி என்றைக்கும் போல் தியேட்டர் வாசலில் உட்கார்ந்திருந்தார். விடாமல் காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்தது. டீ குடிப்பதற்குக் கூட பணம் இல்லை. மழையில் எவரேனும் காலணி தைக்கக் கொடுத்தால் பணம் கிடைக்கும். டீ குடிக்கலாம் என எண்ணினார். தெரு வெறிச்சோடி இருந்தது. அவரும் ஒரு மரமும் எட்டுப் பழைய செருப்புகளும் மட்டும் இருந்தன.

சிறுமியின் காலணி :
தியேட்டரின் வலப்புறச் சந்தில் இருந்து சிறுமியொருத்தி மீனைப்போலச் சுழன்று அவர் அருகில் வந்து ஒரு காலணியைக் கொடுத்துத் தைத்து வைக்கும்படிக் கூறிவிட்டுச் சென்றாள். அந்தக் காலணி இளம் சிவப்பு நிறத்தில் வெல்வெட் தைத்துப் பூ வேலை கொண்டதாய் இருந்தது. அந்தக் காலணியில் ஏதோ பெயரிடப்படாத நறுமணம் வீசியது. காலணியைத் தைத்து முடித்துவிட்டு அச்சிறுமிக்காகக் காந்திருந்தார். இரண்டு ரூபாய் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தார். அச்சிறுமி இரவு வரை வரவேயில்லை. மழை பெய்வதால் வரவில்லை என எண்ணியவராய் அந்தக் காலணியை வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.

மாரியின் ஏமாற்றம் :
அடுத்த நாள் மாரி அந்தக் காலணியைத் துடைத்து, தனது நீலநிற விரிப்பில் வைத்துவிட்டு வேலையைத் தொடங்கினார். அன்றும் அந்தச் சிறுமி வரவில்லை. மறந்துவிட்டாளா? இல்லை யாரிடம் கொடுத்தோம் எனத் தெரியாமல் அலைகிறாளா? என்று எண்ணியபடி அன்றும் அக்காலணியை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். இப்படியே. பல நாட்கள் கழிந்தன.

மாரியின் மனைவி :
மாரியின் மனைவி ஓர் இரவில் அந்தக் காலணியைக் கண்டாள் அதன் வசீகரம் அவளை ஈர்த்தது. அதனைப் போட்டுப் பார்த்தாள். அளவில் சிறியதாக இருந்தாலும் அவளுக்குச் சரியாக இருந்தது. மற்றொரு காலணியைத் தேடிப் பையைக் கொட்டினாள். சப்தம் கேட்டு மாரி வந்து பார்த்தார். மனைவியின் வலக்காலில் இருந்த அந்தக் காலணியைப் பார்த்தார். மனைவியைத் திட்டி விட்டு காலணியை எடுத்துப் பார்த்தார் கிழியவில்லை. சிறுமியின் காலணி மனைவிக்குப் பொருந்தியதை எண்ணி வியந்தார். அவருக்கும் அந்தக் காலணியின் மீது ஆசை ஏற்பட்டதால் தன் வலக்காலை அதனுள் நுழைத்துப் பார்த்தார். அவருக்கும் பொருந்தியது. இது விசித்திரமாய் இருந்தது. அவரால் யோசிக்க முடியவில்லை. உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பையில் போட்டுக் கொண்டார்.

காலணியின் விசித்திரம் :
மறுநாள் மாரி அவருடன் தொழில் செய்பவரிடம் இந்தக் காலணியின் விசித்திரம் பற்றிக் கூறினார் அவரும் போட்டுப் பார்த்தார் பொருத்தமாக இருந்தது. இச்செய்தி நகர் முழுவதும் பரவியது சிறியவர் முதல் முதியவர் வரை அந்தக் காலணி அனைவருக்கும் பொருந்தியது. அதனைக் காலில் அணிந்தால் மேகத்துணுக்குகள் காலடியில் பரவுவது போலவும் பனியின் மிருது படர்வது போலவும் இருப்பதாகப் பலர் கூறினர். கோடைக்காலம் வந்தது அந்தக் காலணியை அணிந்து பார்த்தவர்கள் அவர்களாகவே பணம் கொடுத்தனர். அப்பணத்தில் இரண்டு பசு வாங்கினார். வீடு கட்டினார் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்தார். இந்நிலையிலும் அச்சிறுமியை அவர் தேடிக் கொண்டேதான் இருந்தார்.

முப்பது வருடப் பயணம் :
மாரி வருவதற்கு முன்பாகவே பலர் வந்து மரத்தடியில் காத்திருப்பார்கள். காலணியை அணிந்து பார்ப்பார்கள் முகத்தில் சந்தோஷம் பீறிடும். கலைந்து போவார்கள் முப்பது வருடம் கடந்தது. ஒரு நாள் இரவு மாரி வீடு திரும்பும்போது அக்காலணியைத் திருட முனைந்த இருவர் தடியால் அடித்தனர். காலணி திருடு போகவில்லை . தலையில் பட்ட அடியால் அவர் பலவீனமானார். அன்றிலிருந்து வெளியில் செல்லவில்லை பார்வையாளர்கள் அவர் வீடு தேடி வந்து சென்றனர். அவருடைய மனதில் மட்டும் அச்சிறுமியினால் நாம் வளர்ந்தோம். இறப்பதற்குள் அவளைப் பார்க்க வேண்டுமே’ என வேதனையுற்றார்.

மீண்டும் வந்த சிறுமி :
ஒரு மழை இரவில் பார்வையாளர்கள் வந்து சென்றதும் மத்திய வயதில் ஒரு பெண் நனைந்தபடி நின்றிருந்தாள். அவள் தணிவான குரலில் சொன்னாள். “வெகு தாமதமாகிவிட்டது எனது காலணியைத் தைத்துவிட்டீர்களா இல்லையா?” என்றாள். அவளை அடையாளம் கண்டு கொண்டார் மாரி “வலது காலணியை தைக்கக் கொடுத்தது நினைவிருக்கிறதா?” என்றாள். மாரி தன்னிடம் இருந்த காலணியைக் காட்டினார். “இந்தக் காலணி உலகின் எல்லாப் பாதங்களுக்கும் பொருந்துகிறது” என்று கூறினார்.

சிறுமியின் செயல் :

சிறுமி ஆச்சரியமின்றித் தலையாட்டி விட்டு தன்னிடம் இருந்த நாணயம் எதையோ கூலியாகக் கொடுத்துவிட்டுக் காலணியைப் பெற்றுக் கொண்டாள். அவள் யார் என அறிவதற்காக மாரி அவளிடம் யார் எனக் கேட்ட கேள்விக்குப் பதில் கூறாமல் சென்றுவிட்டாள். அவள் இரு காலணிகளையும் தரையிலிட்டுக் காலில் அணிய முயன்றாள். அவள் கொண்டு வந்த இடது காலணி பொருந்தியது தைத்து வாங்கின வலது காலணி பொருந்தவில்லை சிறியதாக இருந்தது.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

8.5 பெயர்ச்சொல்

Question 1.
கீழ்க்காணும் பத்தியைப் படித்து அதில் இடம் பெற்றுள்ள இடுகுறி, காரணப் பெயர்களை அறிந்து எழுதுக.
நீர் வற்றிப்போன குளத்தில் செந்தாமரை, ஆம்பல், கொட்டி, நெய்தல் முதலான கொடிகளும் வாடியிருந்தன. நீர் நிரம்பி இருந்தவரை ஊர் மக்களும், விலங்குகளும் மரங்கொத்தி போன்ற பறவைகளும் பயன்படுத்தி மகிழ்ந்த குளம் அது. காலை நேரம் சூரியன் காய்ந்து கொண்டிருந்தது. இப்போது அக்குளத்தைக் கண்டு கொள்வார் யாருமில்லை
Answer:
இடுகுறிப் பெயர் :
(i) குளம்
(ii) ஆம்ப ல்
(iii) கொட்டி
(iv) நெய்தல்
(v) சூரியன்

காரணப் பெயர் :
(i) மரங்கொத்தி
(ii) செந்தாமரை

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
இடுகுறிப்பெயரை வட்டமிடுக.
அ) பறவை
ஆ) மண்
இ) முக்காலி
ஈ) மரங்கொத்தி
Answer:
ஆ) மண்

Question 2.
காரணப்பெயரை வட்டமிடுக.
அ) மரம்
ஆ) வளையல்
இ) சுவர்
ஈ) யானை
Answer:
ஆ) வளையல்

Question 3.
இடுகுறிச்சிறப்புப் பெயரை வட்டமிடுக.
அ) வயல்
ஆ) வாழை
இ) மீன்கொத்தி
ஈ) பறவை
Answer:
ஆ) வாழை

குறுவினா

Question 1.
பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
Answer:
பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை
(i) பொருட்பெயர்
(ii) இடப்பெயர்
(iii) காலப்பெயர்
(iv) சினைப்பெயர்
(v) குணப்பெயர்
(vi) தொழிற்பெயர்

Question 2.
இடுகுறிப்பெயர் என்றால் என்ன?
Answer:
நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் இட்டு வழங்கிய பெயர் இடுகுறிப்பெயர் ஆகும். (எ.கா.) மண், மரம், காற்று.

Question 3.
காரணப்பெயர் என்றால் என்ன?
Answer:
நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதி இட்டு வழங்கிய பெயர் காரணப்பெயர் ஆகும். (எ.கா.) நாற்காலி, கரும்பலகை.

சிறுவினா

Question 1.
அறுவகைப் பெயர்ச்சொற்களை எழுதுக.
Answer:
அறுவகைப் பெயர்ச்சொற்கள் :
(i) பொருட்பெயர் – மயில், பறவை
(ii) இடப்பெயர் – தெரு, பூங்கா
(iii) காலப்பெயர் – நாள், ஆண்டு
(iv) சினைப்பெயர் – இலை, கிளை
(v) பண்புப்பெயர் – செம்மை, நன்மை
(vi) தொழிற்பெயர் – ஆடுதல், நடித்தல்.

அகராதியைப் பயன்படுத்தி பொருள் எழுதுக

1. கருணை
2. அச்சம்
3. ஆசை

அகராதி :
1. கருணை – இரக்கம்
2. அச்சம் – பயம்
3. ஆசை – விருப்பம்

கீழ்க்காணும் பெயர்ச் சொற்களை அகரவரிசையில் எழுதுக

Question 1.
பூனை, தையல், தேனி, ஓணான், மான், வௌவால், கிளி, மாணவன், மனிதன், ஆசிரியர், பழம்
Answer:
அகரவரிசை :
1. ஆசிரியர்
2. ஓணான்
3. கிளி
4. தேனி
5. தையல்
6. பழம்
7. பூனை
8. மனிதன்
9. மாணவன்
10. மான்
11. வௌவால்.

பின்வரும் வாக்கியங்களில் உள்ள அறுவகைப் பெயர்களை எடுத்து எழுதுக

Question 1.
கைகள் இரண்டும் பிறர்க்கு உதவவே எனச் சான்றோர் கருதினர்.
Answer:
(i) கைகள் – சினைப்பெயர்
(ii) சான்றோர் – பொருட்பெயர்

Question 2.
அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூலின் பயனாகும்.
Answer:
அடைதல் – தொழிற்பெயர்.

Question 3.
அறிஞர்களுக்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்.
Answer:
அடங்கல் – தொழிற்பெயர்.

Question 4.
நீதிநூல் பயில் என்கிறார் பாரதியார்.
Answer:
நீதிநூல் – பொருட்பெயர்

Question 5.
மாலை முழுதும் விளையாட்டு.
Answer:
மாலை – காலப்பெயர்.

Question 6.
அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்.
Answer:
மேலோர் – பொருட்பெயர்.

பின்வரும் பாடலைப் படித்து, அடிக்கோடிட்ட சொல் எவ்வகைப் பெயர் என்பதை எழுதுக

1. விடியலில் துயில் எழுந்தேன். – விடியல் – காலப்பெயர்
2. இறைவனைக் கை தொழுதேன். – கை – சினைப்பெயர்
3. புகழ்பூத்த மதுரைக்குச் சென்றேன் –  மதுரை – இடப்பெயர்
4. புத்தகம் வாங்கி வந்தேன். – புத்தகம் – பொருட்பெயர்
5. கற்றலைத் தொடர்வோம் இனி. – கற்றல் – தொழிற்பெயர்
6. நன்மைகள் பெருகும் நனி.  – நன்மைகள் – பண்புப்பெயர்

சொற்றொடரை முறையாக வரிசைப்படுத்துங்கள்

1. சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்.
2. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்.
3. சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்.
4. அமுதசுரபியைப் பெற்றாள்.
5. ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்.
Answer:
1. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்
2. அமுதசுரபியைப் பெற்றாள்.
3. ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்.
4. சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்.
5. சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்.

ஒலி வேறுபாடறிந்து வாக்கியத்தில் அமைத்து எழுதுக

1. அரம் – அறம்
அரம் – கூர்மையான கருவி – இரும்பைத் தேய்த்துக் கூர்மையாக்குவதற்கு அரம் பயன்படும்.
அறம் – தர்மம் – பழந்தமிழர்கள் அறச்செயல்களில் சிறந்து விளங்கினர்.

2. மனம் – மணம்
மனம் – உள்ளம் – பிறருக்கு உதவி செய்வதற்கு மனம் வேண்டும்.
மணம் – வாசனை – மல்லிகை மணம் மிக்க மலர்.

இருபொருள் தருக

(எ.கா) ஆறு
ஆறு – நதி
ஆறு – எண்
1. திங்கள்
திங்கள் – கிழமை, மாதம், நிலவு

2. ஓடு
ஓடு – ஓடுதல், வீட்டின் கூரையாகப் பயன்படுவது

3. நகை
நகை – அணிகலன், புன்னகை

புதிர்ச் சொல் கண்டுபிடி

Question 1.
இச்சொல் மூன்றெழுத்துச் சொல். உயிர் எழுத்துகள் வரிசையில் முதல் எழுத்து இச்சொல்லின் முதல் எழுத்து. வல்லின மெய் எழுத்துகளின் வரிசையில் கடைசி எழுத்து இச்சொல்லின் இரண்டாம் எழுத்து. வாசனை என்னும் பொருள்தரும் வேறு சொல்லின் கடைசி எழுத்து இச்சொல்லின் மூன்றாம் எழுத்து. அஃது என்ன?
Answer:

அறம்.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆

8.6 திருக்குறள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ஏழைகளுக்கு உதவி செய்வதே ………………… ஆகும்.
அ) பகை
ஆ). ஈகை
இ) வறுமை
ஈ) கொடுமை
Answer:
ஆ) ஈகை

Question 2.
பிற உயிர்களின் …………….. க் கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும்.
அ) மகிழ்வை
ஆ) செல்வத்தை
இ) துன்பத்தை
ஈ) பகையை
Answer:
இ) துன்பத்தை

Question 3.
உள்ளத்தில் …………….. இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்.
அ) மகிழ்ச்சி
ஆ) மன்னிப்பு
இ) துணிவு
ஈ) குற்றம்
Answer:
ஈ) குற்றம்

இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக

Question 1.
வறியார்க்கொன்று ஈகைமற்று ஈவதே எல்லாம்
குறியெதிர்ப்பை உடைத்து நீரது.
Answer:
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து.

Question 2.
எனைத்தானும் யார்க்கும் எஞ்ஞான்றும் மனத்தானாம்
மாணாசெய் தலை யாமை.
Answer:
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.

குறுவினா

Question 1.
அறிவின் பயன் யாது?
Answer:
பிற உயிரின் துன்பத்தைத் தமது துன்பம் போல் கருதுவதே அறிவின் பயன் ஆகும்.

Question 2.
பிற உயிர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும்?
Answer:
தம்மிடம் இருப்பவற்றைப் பிற உயிர்களுக்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்ற வேண்டும்.

Question 3.
ஈகை பற்றிய வள்ளுவரின் கருத்து யாது?
Answer:
இல்லாதவர்க்குத் தருவதே ஈகை ஆகும். மற்றவை எல்லாம் பயனை எதிர்பார்த்துச் செய்பவை ஆகும்.

கலைச்சொல் அறிவோம்

1. அறக்கட்டளை – Trust
2. தன்னார்வலர் – Volunteer
3. இளம் செஞ்சிலுவைச் சங்கம் – Junior Red Cross
4. சாரண சாரணியர் – Scouts & Guides
5. சமூக சேவகர் – Social Worker

◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆















Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY