Ads Right Header

குரூப் - 2 தேர்வு குளறுபடி: TNPSC., இன்று ஆலோசனை !

 


'குரூப் - 2' தேர்வில் நிகழ்ந்த குளறுபடி மற்றும் சமீபகாலமாக அதிகரித்துள்ள பணி நியமன பிரச்னைகள் குறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. 'குரூப் - 2' பிரதான தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழக அரசு துறைகளில், 'குரூப் 2, 2 ஏ' பணிகளில் காலியாக உள்ள, 5,446 பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வழியே கடந்த ஆண்டு மே, 21ல் முதல் நிலை தகுதி தேர்வு நடந்தது.

இதில், 9 லட்சம் பேர் பங்கேற்ற நிலையில், நவ., 8ல் தேர்வு முடிவுகள் வெளியாகின.
இதில் தேர்ச்சி பெற்ற, 55 ஆயிரம் பேருக்கு, குரூப் - 2 பிரதான தேர்வு நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.
அன்று காலையில் நடக்கவிருந்த தமிழ் தகுதித்தாள் தேர்வுக்கு, பல தேர்வு மையங்களுக்கு தேர்வு கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்வுக்கான விடைத்தாள்கள் வர தாமதமானது. இதனால், காலை, 9:30 மணிக்கு திட்டமிட்டபடி தேர்வை துவக்க முடியவில்லை.

தாமதமாக தேர்வை நடத்த துவங்கினாலும், பல இடங்களில் தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படம் மற்றும் பதிவெண்ணுடன் கூடிய ஓ.எம்.ஆர்., விடைத்தாள்கள் மாற்றி வழங்கப்பட்டன.
அதனால், தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர். பல தேர்வர்கள் தங்கள் பதிவெண்களை பார்க்காமல், மாறியிருந்த விடைத்தாளில் விடைகளை வேகமாக குறிப்பிட்டதால் அச்சம் அடைந்தனர்.
பின், தேர்வு மையங்களில் இருந்து, டி.என்.பி.எஸ்.சி.,க்கு தகவல் அளிக்கப்பட்டு, விடைத்தாள்களை சரியாக வழங்கவும், விடைத்தாள் மாறியோருக்கு, மாற்றாக வெற்று விடைத்தாள்கள் வழங்கியும், தேர்வு நடத்தப்பட்டது.

இதனால், பிற்பகலில், 2:00 மணிக்கு துவங்க வேண்டிய விரிந்துரைக்கும் வகையிலான தேர்வும் தாமதமாக துவங்கியது. மாலை, 5:00 மணிக்கு முடிய வேண்டிய தேர்வு, பல இடங்களில், 6:30 மணி வரை நடந்தது.
அவசர கூட்டம்

இந்த குளறுபடிகளின் போது, பல மையங்களில் தேர்வு துவங்கப்பட்டு, இடையில் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டன. இந்த காலகட்டத்தில் தேர்வர்கள், தங்களுக்கு கிடைத்த வினாத்தாளில் இருந்த வினாவிற்கான விடைகளை மொபைல் போனில் தேடி பார்த்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன் காரணமாக, 'குரூப் - 2' முதன்மை தேர்வை ரத்து செய்து விட்டு, மீண்டும் சரியாக திட்டமிட்டு நடத்த வேண்டும் என, பல தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி.,யின் பொறுப்பு தலைவர் முனியநாதன் தலைமையில், ஆணைய உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடக்க உள்ளது. இதில், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அஜய் யாதவ், செயலர் உமா மகேஸ்வரி மற்றும் ஆணைய உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளனர்.

இந்த கூட்டத்தில், குரூப் 2 தேர்வின் குளறுபடிகள் குறித்து ஆலோசித்து, தேர்வு ரத்து செய்யப்படுமா அல்லது நீதிமன்ற உத்தரவு வரும் வரை, தேர்வு நடவடிக்கைகளை தொடர்வதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY